அம்பாறை, பதியத்தலாவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் போதைப்பொருள் அடங்கிய இரண்டு மாத்திரைகளை உட்கொண்ட இரண்டு மாணவர்கள் மயங்கி விழுந்த நிலையில் பதியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலையில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் 6 வயது மாணவனும் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 11 வயது மாணவனுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த இரண்டு பாடசாலை மாணவர்களுக்கும் போதைப்பொருள் விற்பனை செய்தச் சந்தேகத்தின் பேரில் பதியத்தலாவ, கெஹெல் உல்ல பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞனொருவரை கைதுசெய்யதுள்ளனர்.
இதேவேளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு மாணவர்களும் சகோதரர்கள் என்பதுடன் இவர்கள் இருவரும் பாடசாலைக்கு வரும் வழியில் கைதான இளைஞனை சந்தித்துள்ள நிலையில் அந்த இளைஞர் இவர்களுக்கு போதை மாத்திரைகளைக் கொடுத்துள்ளதாகப் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பின்னர் பாடசாலைக்கு சென்ற இரண்டு மாணவர்களும் அந்த இளைஞன் கொடுத்த போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளதுடன் சிறிது நேரத்தில் இரு மாணவர்களும் மயங்கி வீழ்ந்துள்ளதாகவும் இது குறித்து அதிபருக்கும் தெரிவிக்கப்பட்டதுடன் ஆசிரியர்கள் சிலரால் இந்த மாணவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.