Our Feeds


Thursday, June 20, 2024

Zameera

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் 2155 முறைப்பாடுகள்


 நடப்பாண்டின் ஜனவரி முதல் ஜூன் 18 வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பாக 2,155 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் 1,051 முறைப்பாடுகள் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.


அதேவேளை 11 சட்டவிரோத தொழில் நிறுவனங்களை சோதனையிட புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் போது 65 மோசடிக்காரர்கள் விசாரணை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர்கள் 8 பேரும் உள்ளடங்குகின்றனர்.


இந்த நாட்களில் இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளைத் தேடி செல்வது அதிகரித்து வருவதாகவும், அதேவேளை விசேட புலனாய்வுப் பிரிவிற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. 


பத்தரமுல்லையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதான அலுவலகம் மட்டுமன்றி, ஹாலி-எல, இரத்தினபுரி, தங்காலை, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய மாகாண அலுவலகங்களிலும் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.


2024 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ரூ.65,103,626 தொகையை பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகளால் மீட்டெடுக்க முடிந்ததாக அந்த அறிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கோ வெளிநாட்டு வேலையைப் பெறுவதற்கு பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்பு எவ்வாறு அதை செய்ய வேண்டும் என்பது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


குறிபிட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் நிறுவனத்துக்கு வேலைவாய்ப்பு தொடர்பில் கட்டளை வழங்கப்பட்டுள்ளதா? அல்லது அவ்வாறான வேலைவாய்ப்புகள் உள்ளதா தொடர்பில் www.slbfe.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று அல்லது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். 


மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் உங்களுக்குத் தெரிந்தால் 011 2864241 என்ற இலக்கத்திற்குப் பணியகத்தின் விசேட புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு பணியகம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »