Our Feeds


Thursday, June 20, 2024

Anonymous

மைத்திரியை நம்பலாமா என 2014 இல் ரனில் கேட்டார் - அப்போது 'Yes' என்றேன். இப்போது கேட்டால் 'NO' என்பேன் - ராஜித Open Talk

 



கடந்த 2014ம் ஆண்டு ஜனாதிபதி பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நானே ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிமுகப்படுத்தினேன், அப்போது நான் மைத்திரி மீது நம்பிக்கை வைத்திருந்தேன், அது பொய் என இப்போது புரிந்து கொண்டேன் என முன்னாள் அமைச்சர் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.


சமூக ஊடக கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;


“.. 2014ம் ஆண்டு நான் ரணில் விக்கிரமசிங்கவை இரகசியமாக சந்திக்கையில் நான் ரணிலிடம், பாதுகாப்பாளர்களோ சாரதிகளோ வேண்டாம் தனியாக வாருங்க என்று கூறினேன். அப்போது ரணில் விக்கிரமசிங்க தினேஷ் வீரகொடியுடன் வந்திருந்தார். இலங்கையில் உள்ள திறமையான தொழில்வல்லுநர், பொருளாதார வல்லுநர் அவர் தான் காரை ஓட்டி வந்தார்.


நான் அப்போது ரணிலிடம் கூறினேன், நம்மால் வெற்றி பெற முடியாது. அதற்கான காரணங்களையும் தரவுகளையும் முன்வைத்தேன். அப்போது ரணில் என்னிடம் கூறியது எவரும் தேவையில்லை ராஜித நீங்கள் இம்முறை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குங்கள் என்று தெரிவித்தார். அப்போது நான் கூறினேன், களுத்துறை மாவட்டத்திலிருந்து போட்டியிடுவது என்பது அவ்வளவு இலேசில்லை.. என்னிடம் செலவளிக்க பணம் இல்லை அது சரிப்பட்டு வராது எனத் தெரிவித்தேன். அப்போது இல்லை நிதியினை பற்றிய கவலை வேண்டாம். நான் நிதிக்கு பொறுப்பு  கட்சியில் இருந்து தேவையான அனைத்து கட்சி சார்பான ஆதரவுக்கும் நான் பொறுப்பு இதற்கு சரியான ஆள் ராஜித நீங்கள் தான், எனக்காக எவ்வளோ செய்தீர்கள் என ரணில் விக்கிரமசிங்க கூறினார். முதலில் என்னுடைய பெயரே ஜனாதிபதி வேட்பாளராக முன்வைக்கப்பட்டது. பின்னர் மைத்திரியை கொண்டு வந்ததும் நான் தான்.


நான் முடியாது எனக் கூற இன்னொரு காரணமும் இருந்தது. இதனை செய்வதாக இருந்தால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவும் வேண்டும். அவர்களின் வாக்கினை உடைக்க வேண்டும். அதற்காக கொஞ்சம் பொறுங்கள், எனக்கு 48 மணித்தியாலங்கள் தாருங்கள் என்றேன். அப்போது என்னிடம் மைத்திரி சுதந்திரக் கட்சியின் உள்விவகாரங்கள் குறித்தும் மஹிந்தவுடனான மனக்கசப்பு குறித்தும் மைத்திரி புலம்பும் தருணம் அது.. அப்போது எனக்கு கிளிக் ஆனது தான் மைத்திரி, எனக்கு முன்னர் சுமார் ஆறு மாதங்களுக்கு முன் சந்திரிக்காவும் இது குறித்து பேசியுள்ளார். அப்போது சந்திரிக்கா வெளிநாட்டில் இருந்தார்.


மைத்திரியிடம் நான் கூறினேன், எனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் நாமத்தினை உங்களுக்கு வழங்கியுள்ளேன். இதில் ஆம் இல்லை என்று ஒன்றில்லை. அரசியல் என்று வந்துவிட்டால் துணிச்சலாக களமிறங்க வேண்டும் என்றேன். மைத்திரி கூறினார் ராஜித நீங்கள் போட்டியிடுங்கள் நான் உதவுகிறேன் என்றார். அப்போது நான் கூறினேன் நான் சுதந்திரக் கட்சி ஆளில்லை, ஆதலால் நான் போட்டியிட்டாலும் என்னால் சுதந்திரக் கட்சியின் வாக்குகளை பெறமுடியாது எனத் தெரிவித்தேன். அப்போது அவர் என்னிடம் 24 மணித்தியாலம் தாருங்கள், மனைவியுடன் கலந்தாலோசித்து கூறுவதாக கூறினார்.


அப்போது அவர் கூறினார் பிள்ளைகளுடன் படுக்கையறையில் ஒன்று கூடி, ஐவரும் கலந்தாலோசித்தோம் ராஜித எனக்கு இவ்வாறு போட்டியிட கோருகிறார். நான் போட்டியிட்டு வெற்றி பெற்றால், மஹிந்த ராஜபக்ஷ உங்கள் எல்லோரையும் ஏதும் ஒரு வகையில் வழக்கு தாக்கல் செய்து சிறையில் அடைப்பார். 


அவ்வாறு நடந்தால் எனக்கும் அம்மாவுக்கும் ஹார்ட் எட்டக் வந்து நாம் நோய் வாய்ப்படுவோம், இறக்கவும் நேரிடலாம் என்று கூற, மைத்திரியின் மகன் தஹம் சொல்லி இருக்கிறார், அப்பா நீங்கள் இப்போதும் நடைபிணமாகத்தானே இருக்கிறீர்கள். எங்களுடன் கதைப்பதில்லை, வீட்டுக்கு வந்தாலும் டிவி முன்னர் அமர்ந்திருக்கிறீர்கள். நாம் கதைத்தாலும் உங்களுக்கு கோபம் வரும். காரணம் என்னவென்று சொல்லுவதுமில்லை. அப்போது மைத்திரி கூறி இருக்கிறார் நீங்கள் சிறைக்கு செல்வதை பார்த்து எனக்கும் அம்மாவுக்கும் விஷம் குடித்து தான் சாக வேண்டி வரும் என்று கூறி இருக்கிறார். 


அப்போது தஹம் கூறியுள்ளார் அப்போ நாங்கள் ஐவரும் விஷம் அருந்தி சாவோம் தோற்றாலும் வென்றாலும் நடப்பதை பார்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.


அதற்கு பின்னர் நான் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து மைத்திரி குறித்து கூறினேன். அப்போது அவரை நம்பலாமா என ரணில் கேட்டார். எங்களுக்கு புரியாதவை தான் அவர் கேட்ட கேள்வி. அன்றையகேள்வி இன்று நிரூபணமானது. ‘can you trust him?’ என்ற கேள்வி இன்னும் எனக்கு ஞாபாகத்தில் உள்ளது. அப்போது நான் ‘yes’ எனக் கூறினேன். இப்போது அதற்கு எனது பதில் ‘No’…”

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »