அத்துடன், சர்வதேச பிணைமுறிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை வெற்றியடையச் செய்வதற்கு இந்நிலைமை உதவும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி,
“2022 ஏப்ரல் 12 ஆம் திகதி, குறிப்பிட்ட அளவு வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்த இலங்கை முடிவு செய்தது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 600, 700, 1000 ஆக உயரும் என்று, அன்று சிலர் குற்றம் சாட்டினர். ஆனால் நாம் அந்த நிலைமையைக் கட்டுப்படுத்தினோம்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில், கடனை மறுசீரமைக்குமாறு எமக்குத் தெரிவிக்கப்பட்டது. அதற்காக லாசார்ட் நிறுவனத்தை எமது பிரதிநிதியாகவும், சட்ட விடயங்களுக்காக கிளிபர்ட் ஹான்ஸ் நிறுவனமும் நியமிக்கப்பட்டன. இதன்போது, நாம் முதலில் உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க நடவடிக்கை எடுத்தோம். இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதும் பலதரப்பு நிறுவனங்களின் கடனை செலுத்துவதற்காக ஒரு நாடாக நாம் செயற்பட்டு வந்தோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை இருதரப்பு கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளோம். இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து இருதரப்பு கடன் முகாமைத்துவத்திற்கான உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவை உருவாக்கி அதற்காக செயற்பட்டன. அதே சமயம் சீனாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். இவை அனைத்தினதும் முடிவில், நாம் வெற்றி பெற்றுள்ளதுடன், கடனை திருப்பிச் செலுத்தும் நிலைபேறான நாடாக மாறியுள்ளோம். இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும். மேலும், நமது நாட்டுக்கு மேலும் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். மேலும், சர்வதேச பிணைமுறிகள் வைத்திருப்பவர்களுடனான பேச்சுவார்த்தைகளை வெற்றியடையச் செய்வதற்கு இந்த வெற்றி உதவும் என்பதைக் கூற வேண்டும். இப்போதும் அது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
அதேபோன்று, சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முழுமையான கடன் மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படுகின்றது என்பதையும் கூற வேண்டும். மொத்தக் கடன் தொகையை மொத்த தேசிய உற்பத்தியில் 95% வரை குறைக்க வேண்டும். மேலும், வெளிநாட்டுக் கடனுக்கான தற்போதைய வட்டியை மொத்த தேசிய உற்பத்தியில் 4.5% வரை குறைக்க வேண்டும்” என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.