தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்க ஆளும், எதிர்க்கட்சி அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
1700 ரூபா சம்பளத்தை வழங்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதும் தோட்டக் கம்பனிகள் இதுவரை அதனை வழங்க மறுத்து வருகின்றன. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல் அனைவரும் இணைந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு அதனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
1700 ரூபா சம்பளம் என்பது எந்த வகையிலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு போதுமானது என நான் கூறவில்லை. என்றாலும் அதையாவது பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபா சம்பளம் 2020 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. அது சுமார் ஏழு டொலர்கள் ஆகும். அந்த சம்பளமே இன்றும் வழங்கப்படுவது என்பது எத்தளவு அநீதியாகும்.
அதேவேளை, அண்மையில் தோட்டம் ஒன்றில் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியில் தொழிலாளர்களின் சார்பாக நான் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், சில ஊடகங்கள் அந்த செய்தியை திரிபு படுத்தி வெளியிட்டுள்ளன. அந்தத் தவறு நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
அதேவேளை, தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தொழிலாளர்களை கைது செய்யும் அதிகாரம் பொலிசாருக்கு கிடையாது. அந்த வகையில் தோட்ட முகாமைத்துவம் பாரிய அநீதி இழைத்து வருகிறது என்றார்.