மண்சரிவு அவதானம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள 1,5025 வீடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான இடங்களில் உள்ளவர்களுக்கு அரசாங்கத்தால் வீடுகள் வழங்கப்பட்டுள்ள போதும் அவதானத்துக்குரிய இடங்களிலுள்ள வீடுகளில் இருந்து வெளியேறாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் பாதிப்பு தொடர்பில் அரச தரப்பு எம்பி. அகில சாலிய எல்லாவெல பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனைத்தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் இதுவரையான மதிப்பீடுகளுக்கு அமைய 71 வீடுகள் முழுமையாகவும், 9378 வீடுகள் பகுதியளவிலும், 825 சிறு மற்றும் நடுத்தர தொழிற்றுறை மத்திய நிலையங்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகிய அனர்த்தங்களினால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.இடர்களுக்கு உள்ளான 3261 குடும்பங்களைச் சேர்ந்த 113,028 பேர் 165 தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் வீடுகளின் மேல் மாடிகளில் பாதுகாப்பாக உள்ளவர்களுக்கு தற்காலிக முகாம்கள் ஊடாக உலர் உணவுகள் வழங்கப்படுகின்றன என்றார்.