நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகும் க. பொ.த. சாதாரண
தர பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகளுக் ஹிஜாபினை அணிந்து பரீட்சைக்கு தோற்றுவதற்கு எவ்வித தடையும் இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் , ஹிஜாபினை அணிந்து பரீட்சைக்கு தோற்ற முடியாதென பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இதனை தெரிவித்துள்ளது.
முஸ்லிம் கவுன்சில் சார்பில் அதன் தலைவர் என். எம். அமீன் விடுத்துள்ள அறிக்கையில் இது பற்றி விளக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவிகள் தங்களது முகம் மற்றும் இரு காதுகள் விளங்கும் வகையில் ஹிஜாபினை அணிந்து செல்ல வேண்டும் என பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகளிடம் ஹிஜாபினை அகற்றிச் செல்ல வேண்டும் என பரப்பப்படும் வதந்திகளில் உண்மை இல்லை . ஹிஜாப் அணிந்து செல்வோர் முகம் மற்றும் காதுகள் விளங்கும் வகையில் ஹிஜாப் அணிந்த செல்வது போதுமானது . இதனை பரீட்சை திணைக்களமும், கல்வி அமைச்சும் உறுதிப்படுத்தியிருப்பதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என். எம். அமீன் இரு தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலே தெரிவித்துள்ளார்.
ஹிஜாபினை அணிந்து செல்வோர் எவ்வித அச்சமும் இன்றி இந்த ஆலோசனைகளை பின்பற்றி பரீட்சை மண்டபத்திற்கு செல்லுமாறு கேட்கப்படுகிறார்கள். ஆசிரியர்களும் பெற்றோர்களும் பரீட்சைக்கு தோற்றும் மாணவிகளுக்கு இது தொடர்பான ஆலோசனைகளை வழங்கி பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்குமாறும் வேண்டப்படுகிறீர்கள். சில சக்திகள் பரீட்சைக்கு முதலாவதாக தோற்றும் மாணவிகள் மத்தியிலே பிரச்சனைகளை தோற்றுவதற்காக இவ்வாறான வதந்திகளை பரப்புகின்றனரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்போலி வதந்திகளை நம்பாமல் துணிச்சலோடு பரிட்சைக்கு தோற்றுமாறு சகல முஸ்லிம் மாணவிகளையும் கேட்டுக்கொள்கிறோம்.