Our Feeds


Tuesday, May 14, 2024

Zameera

வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியம்


 பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பெருந்தோட்ட கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியமென நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு எதிராக கம்பெனிகள் மேற்கொள்ளும் நீதிமன்ற நடவடிக்கைளுக்கு முகம்கொடுக்கத் தயாரெனவும் அவர் தெரிவித்தார்.

கூட்டு ஒப்பந்தம் இருந்த காலத்தில் 2 வருடங்களுக்கு ஒரு முறை சம்பளம் அதிகரிப்பு செய்யப்பட்ட நிலையில் கடந்த நான்கு வருடங்களாக தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த அமைச்சர், டொலரின் பெறுமதி வீழ்ச்சியை சாதகமாக கொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க கம்பனிகள் முன்வர வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் குறிப்பிட்டதாவது:

“தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் நாள் சம்பள முறைமை பொருத்தமற்றதாகும். அந்த முறைமையில் இருந்து மாற வேண்டியது அவசியம். அதற்காக நான்கைந்து வருடங்கள் அவசியப்படும். அதற்காக தோட்ட தொழிலாளர்களை 1000 ரூபா சம்பளத்துடன் காத்திருக்கச் வைப்பதை ஏற்றுகொள்ள முடியாது.

ஆரம்பத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் ஒரு ரூபா கூட அதிகரிக்க முடியாதென கூறிய கம்பனிகள், அரசாங்கம் 1700 சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவித்தலை விடுத்த பின்பு அடிப்படைச் சம்ளத்தில் 200 ரூபாவை அதிகரிக்க முன்வந்துள்ளனர். அதனால் சம்பள அதிகரிப்பை செய்ய முடியும் என்று கம்பெனிகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொட்டகலை மே தினக் கூட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அறிவித்தார். ஏப்ரல் 30 ஆம் திகதி பெருந்தோட்ட மக்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தொழில் அமைச்சர் மனுஷ நாணாயக்காரவினால் வெளியிடப்பட்டது.
இது குறித்து சிலர் மக்கள் மத்தியில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வதந்திகள் பரப்பினர். ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்த மறு தினமே அது நடக்காது என்றும் கூறினார்கள்.

இதே பெருந்தோட்ட நிறுவனங்கள் 1000 சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென கூறினார்கள். அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலும் இரண்டு தடவைகள் வெற்றி பெற்றிருக்கிறோம். தற்போது மேல்முறையீடு செய்துள்ளனர். குறித்த வழக்கு ஏற்கனவே உள்ள சம்பள நிர்ணய சபை மீதே தொடரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்போகும் சம்பள விடயத்தில் நிர்ணயச் சபைக்கு தொடர்பில்லை.

1000 ரூபாவுக்கு மேலதிகமாக ஒரு ரூபாவும் கொடுக்க முடியாது என்று கூறிய பெருந்தோட்ட நிறுவனங்கள் 1700 சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்பு 1200 ரூபாவாக அடிப்படை சம்பளத்தை உயர்த்த முன்வந்துள்ளனர்.

ஒரு ரூபா கூட அதிகரிக்க முடியாது என்று கூறியவர்கள் அடிப்படைச் சம்பளத்தில் 200 ரூபாவை அதிகரிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். வழக்கு இடம்பெறுவதால் சம்பள உயர்வு வழங்க முடியாது என்று சட்டம் இல்லை. அது குறித்த எழுத்துமூல அறிவிப்பு சட்டமா அதிபரினால் தொழில் அமைச்சுக்கு அனுப்பட்டிருக்கிறது. பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த விடயத்தை இழுபரியாக்கவே பார்க்கின்றார்கள். இது குறித்து ஜனாதிபதியிடமும் பேசியிருக்கின்றோம்.

அதன்படி ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் தொழில் அமைச்சரால் இது குறித் ஆவணமொன்று தயாரிக்கப்படுகிறது. பெருந்தோட்ட நிறுவனங்கள் எந்தெந்த இடத்தில் எல்லாம் சட்டத்தை மீறியிருக்கின்றது? எந்தெந்த இடத்தில் எல்லாம் அவர்கள் இலக்கு இல்லாமல் வேலை செய்திருக்கின்றார்கள்? மீள் நடுகை செய்யாமலிருப்பதற்கான காரணம் என்ன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படும்.

தோட்டத் தொழிலாளர்கள் தொழில் செய்யும் இடத்தில் கௌரவமாக நடத்தப்படுத்துவதில்லை. அதுவே தொழிலாளர்கள் எண்ணிக்கை குறையக் காரணமாகும். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. தேயிலைத் தோட்டத்தில் தேயிலை மாத்திரம் தான் இருக்கும் என்ற நிலை இன்று மாறிவிட்டது.

பங்களாக்கள் சுற்றுலா இடங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதிலும் நாளாந்தம் 1000 – 2000 டொலர் ஈட்டுகின்றனர். அங்கு தேநீர் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இரு முனைகளில் வருமானம் ஈட்டினாலும் கம்பனிகள் அரசாங்கத்திற்கு வெறும் 500 ரூபாவை மாத்திரமே வழங்குகின்றனர்.

தங்களாலேயே சுற்றுலாத்துறை ஊக்குவிக்கப்படுவதாக கூறிக்கொள்கிறார்கள். இது பெருந்தோட்ட நிறுவனங்களின் சூழ்ச்சியாகும். அதனாலேயே ஜனாதிபதியும் தொழில் அமைச்சரும் எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த 4 வருடங்களாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கிவில்லை. கூட்டு ஒப்பந்தம் இருக்கும்போது இரண்டு வருடத்திற்கு ஒரு முறை சம்பள உயர்வு கிடைத்தது. டொலரின் பெறுமதி வீழ்ச்சி கண்டதன் மூலம் பெருந்தோட்ட கம்பனிகள் அதிக இலாபம் ஈட்டியுள்ளன. அதனால் நிச்சயமாக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »