Our Feeds


Sunday, May 19, 2024

Anonymous

பாராளுமன்றத்தை கலைப்பது ஜனாதிபதிக்கு சாதகமாக அமையாது எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயார்

 

 

ஜனாதிபதி தேர்தல்,பொதுத்தேர்தல் என்ற வேறுபாடில்லை. எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயார்.வெற்றியோ,தோல்வியோ அதனை நாங்கள் எதிர்கொள்வோம்.எந்த தேர்தல் முதலில் நடத்த வேண்டும் என்று பொதுஜன பெரமுன தீர்மானிக்குமாயின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதற்கு. பாராளுமன்றத்தைக் கலைப்பது ஜனாதிபதி சாதகமாக அமையாது எனத் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மஹரக பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற ஓய்வூதியலாளர்களின் தேசிய மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு அதேபோல் எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு.ஆகவே இவ்விரு தேர்தல்களும் நிச்சயம் வெகுவிரைவில் இடம்பெறும்.

பாராளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என்பது தற்போதைய பிரதான பேசுபொருளாகக் காணப்படுகிறது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டிய பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. பதவி காலம் நிறைவடையும் வரை பதவியில் இருக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பாரே தவிர பதவி காலத்தை வரையறுத்துக்கொள்ளமாட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைத்தால் ஜனாதிபதிக்கு அதனால் எவ்வித பயனும் கிடைக்காது.ஜனாதிபதி வசமுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க,காஞ்சன விஜேசேகர,செஹான் சேமசிங்க உட்பட பெரும்பாலானோர் ஜனாதிபதியை விட்டு மீண்டும் பொதுஜன பெரமுன பக்கம் செல்வார்கள்.

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட்டால் அது ஜனாதிபதி தேர்தலுக்கும் செல்வாக்கு செலுத்தும்.பொதுத்தேர்தலின் பெறுபேறுகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்களாணையின் பலத்தை உறுதிப்படுத்தும் ஆகவே


பொதுத்தேர்தலுக்கு சென்றாலும் செல்லாவிட்டாலும் ஜனாதிபதி நெருக்கடிக்குள்ளாகுவார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தும் தேவை பஷில் ராஜபக்ஷவுக்கு உண்டு.ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க வேட்பாளர் ஒருவர் ராஜபக்ஷர்களிடம் இல்லை என்பதால் அவர்கள் பொதுத்தேர்தல் குறித்து அக்கறை கொண்டுள்ளார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் வெற்றிப் பெற்றால் ராஜபக்ஷர்களின் அரசியல் அத்துடன் நிறைவடையும் என்பதை ராஜபக்ஷர்கள் நன்கு அறிவார்கள். பண்டாரநாயக்கர்களின் அரசியல் செல்வாக்கை மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்டதை தொடர்ந்து பண்டாரநாயக்கர்களின் அரசியல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது,ஆகவே இது போன்ற நிலை பொதுஜன பெரமுனவுக்கும் ஏற்படுமா என்ற அச்சம் ராஜபக்ஷர்களுக்கு உண்டு.ஆகவே ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதை ராஜபக்ஷ குடும்பம் விரும்பவில்லை.

பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டிய ராஜபக்ஷர்கள் மக்களால் விரட்டியடிக்கப்பட்டும் இன்றும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் இடம்பெற வேண்டிய நிலையில் தமது குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக தேர்தல்களை நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிக்கிறார்கள். எந்த தேர்தல் முதலில் இடம்பெற்றால் தமக்கும்,தமது குடும்பத்துக்கும் பயன் கிடைக்கும் என்பதை பற்றி சிந்திக்கின்றார்களே தவிர மக்களின் நிலைப்பாடு மற்றும் அரசியல் சிந்தனைகள் பற்றி ராஜபக்ஷர்கள் யோசிக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் முறையாக நடத்தப்படும்.ஜனாதிபதி தேர்தல்,பொதுத்தேர்தல் என்ற வேறுப்பாடில்லை. எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயார்.வெற்றியோ,தோல்வியோ அதனை நாங்கள் எதிர்கொள்வோம். எந்த தேர்தல் முதலில் நடத்த வேண்டும் என்று பொதுஜன பெரமுன தீர்மானிக்குமாயின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதற்கு என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »