Our Feeds


Sunday, May 5, 2024

ShortNews Admin

பொது வேட்பாளர் தொடர்பில் உறுதியான முடிவை எடுங்கள் - அப்புறம் புறா விடு தூது, அன்னம் விடு தூது, மான் விடு தூது பற்றியெல்லாம் பார்க்கலாம் - மனோவின் சூடான பதிலடி



“மனோ மூலம் தூது விடாது எம்மிடம் நேரடியாக சஜித் கூற வேண்டும்” என தமிழீழ விடுதலை இயக்க நண்பர் கோவிந்தன் கருணாகரம் எம்பி கூறி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. 


தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என மும்முரமாக செயற்படும் உங்களுக்கு எதற்காக சஜித் தூது விட வேண்டும் என எனக்கு தெரியவில்லை. பொது வேட்பாளர் தொடர்பில் உறுதியான முடிவை எடுங்கள். முதலில் அதை செய்யுங்கள். அப்புறம் புறா விடு தூது, அன்னம் விடு தூது, மான் விடு தூது, தென்றல் விடு தூது என்பவைகளை பார்க்கலாம். சஜித்திடமும் பேசலாம்.


தன்னை சந்தித்த “மக்கள்-மனு வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக தூதுக்குழு”விடம் சஜித் பிரேமதாச, தான் 13ம் திருத்த மாகாண சபை சட்டத்தை முழுமையாக அமுல் செய்ய உள்ளதாகவும், அதுபற்றி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்க இருப்பதாகவும், அதன் மூலம் சிங்கள மக்களின் ஆணையை பெற உள்ளதாகவும், எனது முன்னிலையில் உறுதி அளித்தார். மக்கள்-மனு வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக தூதுக்குழுவிடம் இதுபற்றி நண்பர் கோவிந்தன் கருணாகரம் எம்பி கேட்டு அறியலாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன் கூறியுள்ளார்.  


மட்டக்களப்பில் நடைபெற்ற, தமிழீழ விடுதலை இயக்க தலைவர் அமரர் சபாரத்தினத்தின் நினைவேந்தல் நிகழ்வில், கோவிந்தன் கருணாகரம் எம்பி, தமுகூ தலைவர் மனோ கணேசனை பற்றி வெளியிட்ட கருத்து பற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,   


தனது இந்த நிலைப்பாடு பற்றி, சஜித் மே தினம் அன்றும் மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார். சஜித்தின் இந்த நிலைப்பாடு பற்றியே நான், எனது கிளிநொச்சி மே தின உரையில் தெரிவித்தேன். நான் கிளிநொச்சிக்கு, அங்கு நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மே தின கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக, நண்பர் சிவஞானம் சிறிதரன் எம்பியின் அழைப்பை ஏற்று வந்து கலந்து கொண்டேனே தவிர, சஜித்தின் தூதுவராக வரவில்லை. மேலும், எனது உரையில், “நான் கிளிநொச்சிக்கு சஜித்துக்கு வாக்கு கேட்டு வரவில்லை”, என்றும் கூட குறிப்பிட்டேன்.


மேலும், 13ம் திருத்த மாகாண சபை முறைமையை வடக்கு கிழக்கு மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக நான் ஒருபோதும் கூறவில்லை. அப்படி நான் ஒருபோதும் கூறுவதும் இல்லை. ஆனால், 13ம் திருத்த மாகாண சபை முறைமை என்பது இன்றைய அரசியலைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள சட்டம். இது புதிதாக வருகின்ற ஒரு தீர்வு அல்ல. இன்று அரசியல் சட்டத்தில் இருப்பதை அப்படியே அமுல் செய்வதாகதான் சஜித் கூறி உள்ளார்.


மேலும் மாகாணசபை முறைமை என்பது வடக்கு கிழக்கு மாகாணங்களை மாத்திரம் சார்ந்தது இல்லை. அது ஒன்பது மாகாணங்களையும் சார்ந்தது. ஆகவே சஜித், வடக்கு கிழக்குக்கு மாத்திரம் அல்ல, முழு நாட்டுக்குமே இந்த உத்தரவாதத்தை வழங்கி உள்ளார் என்பதை தமிழ் கட்சிகள் அறிய வேண்டும்.  


இப்படி சஜித் கூறுவதை போன்று, ஏனைய பெரும்பான்மை கட்சிகளின் உத்தேச ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களும் கூறுவார்களா என தமிழரசு கட்சி கேட்டு பார்க்க வேண்டும் எனவும் நான் என் உரையில் கூறினேன். 


அன்றைய கிளிநொச்சி இலங்கை தமிழரசு மே தின கூட்டத்தில், தமிழரசு தலைவர் அண்ணன் மாவை சேனாதிராசா, நண்பர் சிவஞானம் சிறிதரன் எம்பி, மாகாணசபை அவை தலைவர் சிவஞானம் உட்பட பல தமிழரசு பிரமுகர்கள் அமர்ந்து இருந்தார்கள். பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்ட நண்பர் சீ. வி. விக்கினேஸ்வரன் எம்பியும் இருந்தார்.


அன்றைய தினம் வரையிலும், இன்றும்கூட, இலங்கை தமிழரசு கட்சி தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எந்த ஒரு நிலைப்பாடும் எடுத்து இருக்கவில்லை. ஆகவே எனது உரையில், சஜித் கூறியுள்ளதை போன்று ஏனைய முன்னணி வேட்பாளர்களும் கூறுவார்களா என கேட்டு பாருங்கள் என இலங்கை தமிழரசு கட்சி நண்பர்களை நோக்கித்தான் சொன்னேன்.  


ஏனெனில், 13ம் திருத்த மாகாணசபை முறைமை என்பது கையில் இருக்கும் குருவி. அதற்கும் மேலான தீர்வு என்பது மரத்தில் இருக்கும் குருவி. இன்றைய அரசியல் சட்டத்தில் இருப்பதை முதலில் அமுல் செய்தால்தானே, அதையடுத்து புதிய அரசியல் சட்ட தீர்வுக்கு போகலாம்?


மற்றபடி, நண்பர் கோவிந்தன் கருணாகரம், நண்பர் சீ. வி. விக்கினேஸ்வரன் ஆகியோர் இன்று ஆர்வத்துடன் முன்னெடுக்கும், தமிழ் பொது வேட்பாளர் என்ற யோசனையை மறுதலித்தும் நான் பேசவில்லை. தமிழ் கட்சிகளுக்கு, தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த முழு உரிமை உள்ளது என்றுதான் கூறினேன். ஆனால், புதிய தீர்வு தொடர்பில் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் எந்தவொரு சிங்கள வேட்பாளரும் எழுதி எல்லாம் கொடுக்க மாட்டார்கள் என்றும், அப்படி கொடுத்தால் அவர்கள் தெற்கில் சிங்கள வாக்காளர்களிடம் சிக்கலை எதிர்கொள்வார்கள் எனவும் எனது பட்டறிவில் பட்டதை சொன்னேன்.


மேலும், தமிழ் பொது வேட்பாளர் கோஷம் என்பது வடக்கு கிழக்குக்குக்கு மாத்திரம் பொருந்தும். மலையகம் உட்பட தென்னிலங்கைக்கு பொருந்தாது. ஏனெனில் வடக்கு கிழக்கு ஒரு தளம். மலையகம் உட்பட தெற்கு வேறொரு தளம். இதையும் எனது உரையில் கூறினேன்.


இவ்விடயங்கள் தொடர்பில், வரலாறு முழுக்க எனக்கு மிக தெளிவான யதார்த்தபூர்வமான நிலைபாடுகள் இருப்பதாக நம்புகிறேன். இதை நண்பர் கோவிந்தன் கருணாகரம் எம்பி அறிய வேண்டும். என்னிடம் தடுமாற்றங்கள் கிடையாது. தடுமாற்றம் இருப்பது உங்களிடம்தான். முதலில் உங்கள் தெளிவான நிலைபாடுகளை கூடி கலந்து பேசி அறிவியுங்கள். அதன் பிறகு புறா விடு தூது, அன்னம் விடு தூது, மான் விடு தூது, தென்றல் விடு தூது என்பவைகளை பார்க்கலாம்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »