Our Feeds


Thursday, May 9, 2024

SHAHNI RAMEES

டயனாவின் வெற்றிடத்துக்குப் பெண் ஒருவரை நியமிக்கக் கோரிக்கை




 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின்

பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்துக்குப் பொருத்தமான பெண் ஒருவரை நியமிக்குமாறு கோரி பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.


 


இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்து வழங்கப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்புத் தொடர்பில் உயர்நீதிமன்றத்துக்குக் காணப்படும் நீதிமன்ற அதிகாரத்துக்கு மதிப்பளித்து, அதனை கேள்விக்கு உட்படுத்தாது குறித்த தீர்ப்பினால் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் ஒருவர் குறைவதுடன், பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் குறைவடைவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.


 


பெண்களின் அனுபவம், அறிவு மற்றும் எதிர்கால சிந்தனை என்பன சமூகத்திலுள்ள சகலருக்கும் பயனளிக்கும் வகையிலான கொள்கைகளை வகுப்பதில் பங்களிக்க வேண்டும் என்றும், பயனுள்ள ஜனநாயகத்திற்கு பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் முக்கியமானது என்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் கோரிக்கைவிடுத்துள்ளது.


 


இதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே நீக்கப்பட்டதால் ஏற்படக்கூடிய எதிர்மறையான தாக்கத்தை குறைக்க முடியும் என்பதுடன், பாராளுமன்றத்தில் பாலின சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மைக்கான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.


 


இதன் ஊடாகப் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவு என்ற பிரச்சினையைத் தீர்ப்பது மாத்திரமன்றி, பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும், தலைமைப் பதவிகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் பாராளுமன்றம் உறுதியுடன் உள்ளது என்ற செய்தியைச் சொல்ல முடியும் என்றும் அக்கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


எனவே, மேற்குறிப்பிட்ட விடயத்தைக் கவனத்தில் கொண்டு பாராளுமன்றத்தில் பெண்களுக்கான குரல்களை செவிமடுக்கவும், அவற்றுக்கு மதிப்புக் கொடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியம் நம்புவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »