ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் எண்ணக்கருவுக்கு அமைய மாகாண சபையின் அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகள் மக்களிடம் சென்று விடயங்களை கேட்டறிந்ததன் அடிப்படையிலேயே, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கண் மற்றும் பல் சிகிச்சை, தொற்றா நோய் தொடர்பான அறிவுறுத்தல்கள், ஆயுர்வேத மருத்துவ கிளினிக் மற்றும் சேவைகளை வழங்குதல், தொழில் பயிற்சிகளில் இளைஞர் யுவதிகளை ஈடுபடுத்தல், சுற்றுலாத்துறையின் பாடநெறிகளுக்கான ஆட்சேர்ப்பு, புலமைப்பரிசில் திட்டங்கள், காணி தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு, பொது போக்குவரத்து சேவை தொடர்பான சிக்கல்களுக்கான தீர்வு, சாரதி பயிற்சிக்கான பதிவுகள், சிறிய மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்குதல், தொழில் ரீதியான வழிகாட்டல் சேவைகள், கல்வி தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள், மாகாண வீதி அபிவிருத்தி, அங்கவீனமானவர்கள் மற்றும் சமூக சேவை தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு, கிராம அபிவிருத்தி திட்டங்கள், 60 - 40% மின்சாரம் வழங்குதல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், வீடுகள் மற்றும் தண்ணீர் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள், நவீன மயப்படுத்தப்பட்ட விவசாயத் திட்டங்கள் தொடர்பான அறிவுறுத்தல்கள், கால்நடை உற்பத்தித் திட்டங்கள், நீர்ப்பாசன புனரமைப்பு திட்டங்கள், நன்னீர் மீன்பிடி, அலங்கார மீன் வளர்ப்புத் திட்டங்கள், கூட்டுறவு அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சேவைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான சிக்கல்கள், பிராந்திய அபிவிருத்தித் தேவைகளை இனங்காணல், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்குதல், உத்தியோகஸ்தர்களுடைய நிறுவன ரீதியிலான சிக்கல்களை தீர்த்துவைத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பான சேவைகள் பொதுமக்களுக்காக முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமாரசிறி ரத்நாயக்க உள்ளிட்ட பிரதேச அரசியல் பிரமுகர்கள், மாகாண பிரதான செயலாளர் தமயந்தி பரணகம உள்ளிட்ட மாகாண சபையின் அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வுகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.