உலகின் மிக முக்கிய நாடுகளில் ஒன்றான சீனாவில் இருக்கும்
பாதிக்கும் மேற்பட்ட நகரங்கள் திடீரென மண்ணில் புதைய ஆரம்பித்துள்ளதாகப் பகிர் தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகச் சீனா இருக்கிறது. இருப்பினும், கடந்த சில காலமாகவே அங்குப் பொருளாதார சிக்கல் நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதற்கிடையே மற்றொரு அதிர்ச்சித் தகவல் சீனா குறித்து வெளியாகியுள்ளது. அதாவது சீனாவில் உள்ள பல நகரங்கள் படிப்படியாகப் பூமியில் புதைந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 50க்கும் மேற்பட்ட சீன ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் இதைக் கண்டறிந்துள்ளனர். இதை ஆங்கிலத்தில் land subsidence என்று அழைக்கிறார்கள். சீனாவின் முக்கிய நகரங்களில் கிட்டத்தட்டப் பாதி நகரங்களில் இந்த பிரச்சினை இருப்பதாகக் கூறப்படுகிறது.
பூமியின் மேற்பரப்பு படிப்படியாகப் புதையும். இதை ஆய்வாளர்கள் land subsidence என்று அழைக்கின்றனர். அதாவது சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்குக் கடந்த சில தலைமுறைகளாகவே அங்கு நடந்த கட்டுமானங்கள் முக்கிய காரணமாக இருந்தது.. ஆனால், இப்போது அந்த அதிகப்படியான கட்டுமானங்களே சீனாவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது.
சீனா முழுக்க இந்த பிரச்சினை பரவலாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், நகர்ப்புற திட்டமிடல், உள்கட்டமைப்பு குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும், நகரம் இப்படி மெல்ல மண்ணுக்குள் புதைவது பல கோடி மக்களை ஆபத்தில் தள்ளும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
சீனாவில் உள்ள 82 நகரங்களில் இது தொடர்பாக அவர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். அதில் சுமார் 45% நகரங்கள் ஆண்டுக்கு 0.1 இன்ச் என்ற ரேஞ்சில் மண்ணில் புதைகிறதாம். சில நகரங்கள் ஆண்டுக்கு 0.4 இன்ச் என்ற வேகத்திலும் மண்ணில் புதைவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த வேகத்தில் நகரங்கள் மண்ணில் புதைவது பல வித பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக நகரில் இருக்கும் உள்கட்டமைப்பை இது கடுமையாகப் பாதிக்கும். இதனால் தாழ்வான கடலோரப் பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் மோசமாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த காரணத்திற்கு சில முக்கிய காரணங்களை அவர்கள் குறிப்பிடுகிறார்கள். முதலில் நிலத்தடி நீரை ஓவராக உறிஞ்சி எடுப்பது. நகர்ப்புறங்களில் குடிநீர் மற்றும் தொழிற்சாலைகள் தேவைக்காக அதிகப்படியான நிலத்தடி நீரை எடுக்கிறார்கள். இப்படி அதிக நிலத்தடி நீரை எடுப்பது நிலத்தடி நீர்மட்டத்தை மட்டும் பாதிக்காது.. மாறாக நிலத்திற்கு அடியில் இருக்கும் மண் மிகவும் காய்ந்து பலவீனமாக மாறிவிடும் பிரச்சினையும் இருக்கிறது.
அதேபோல நகரங்களில் மேற்கொள்ளப்படும் அதிகப்படியான கட்டுமானமும் இதற்கு முக்கிய காரணமாகும். கட்டிடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளும் நகரங்கள் புதைந்து போக முக்கிய காரணமாக இருக்கிறது.
பெய்ஜிங் மற்றும் தியான்ஜின் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடக்கும் வேகமாக நகரமயமாக்கல் மற்றும் தொழில்துறை வளர்ச்சி இந்த பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. உயரமான கட்டிடங்கள் மற்றும் பெரிய பெரிய சாலைகள் நிலத்தின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இத்துடன் நிலத்தடி நீர் மட்டமும் குறைவது பாதிப்பை மோசமானதாக மாற்றுகிறது.
இந்த பிரச்சினையால் நீண்ட கால பாதிப்புகள் ஏற்படும். இதைச் சரி செய்யவும் நீண்ட கால நடவடிக்கைகள் தேவைப்படுகிறதாம். குறிப்பாக நகரத்தை எப்படித் திட்டமிடுகிறோம் என்பதை நாம் மொத்தமாக மாற்ற வேண்டும். வேகமாகப் புதையும் நகரங்களைக் கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், நிலத்தடி நீரை வரைமுறை இல்லாமல் எடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சீனாவின் இந்த ஆய்வு உலகத்திற்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கிறது. இப்போதே நாம் சுதாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் பேரழிவைத் தவிர்க்கவே முடியாது.