குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உரிய முறையில் விசாரணைகளை நடத்தினால் அஜித் நிவாட் கப்ரால் எந்த நேரத்திலும் சந்தேக நபராக மாறலாம் எனவே அவருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை நிரந்தரமாக நீக்க முடியாது என கோட்டை நீதவான் கோசல சேனாதீர தெரிவித்தார்.
அஜித் நிவாட் கப்ராலின் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நிரந்தரமாக நீக்குமாறு கோரி சட்டத்தரணி திலின வீரசிங்க பிரேரணை மூலம் விடுத்த கோரிக்கையை நிராகரித்த போதே நீதவான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நியாயமான காரணத்தை முன்வைத்தால் அஜித் நிவாட் கப்ராலின் பயணத்தடையை குறுகிய காலத்தில் நீக்க முடியுமென நீதவான் கோசல சேனாதீர பிரேரணை விசாரணையின் போது தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு தினியாவல பாலித தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் மத்திய வங்கியின் நிதிச் சபை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அஜித் நிவாட் கப்ரால் நிதிச் சபையின் அனுமதியுடன் மட்டுமே மூன்றாம் தரப்பினருக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.