வெளிநாட்டு அரச முறை கடன் மறுசீரமைப்பு எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும். இதன் பின்னர் வங்குரோத்து நிலையில் இருந்து நாடு மீண்டுவிட்டது என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) இடம்பெற்ற இராஜதந்திர சிறப்புரிமை சட்டத்தின் கீழ் 2348/48ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள், பெற்றோலிய உற்பத்தி பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2340/02ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது
உலகில் உள்ள சகல நாடுகளுடனும் பிளவுபடாத வெளிவிவகார கொள்கையுடன் இணக்கமாக செயற்படுவதே இலங்கையின் பிரதான எதிர்பார்ப்பாகும். தேசிய வளங்களை பாதுகாத்துக் கொண்டு அதன் உச்ச பயனை பெற்றுக் கொள்வற்கு பிளவடையாத வகையில் வெளிவிவகார கொள்கையை செயற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஈரான் நாட்டின் ஜனாதிபதி அண்மையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இவரது வருகையின் பின்னர் இலங்கையின் வெளிவிவகார கொள்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி செயற்திட்டத்தை ஈரான் ஜனாதிபதி திறந்துவைத்தார்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக தேசிய மின்கட்டமைப்புக்கு 120 மெகாவாட் மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளது. நீர் மின்னுற்பத்தி விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் எதிர்வரும் ஜூலை மாதமளவில் மின்கட்டணத்தை குறைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டின் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் சுற்றுலாத்துறை சேவையை மேம்படுத்த இலங்கைக்கு நேரடி விமான சேவைகளை முன்னெடுக்க ஈரான் அவதானம் செலுத்தியுள்ளது. இதனூடாக இலங்கையின் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் முன்னேற்றமடையும்.
அண்மையில் சவூதி அரேபியாவில் இடம்பெற்ற 'உலக பொருளாதார பேரவை' மாநாட்டில் கலந்துகொண்டேன்.
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து அந்நாட்டின் வெளிவிவகாரம், முதலீடு மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். இதன் பிரதிபலனாக சவூதி அரேபியாவுடன் 'முதலீட்டு மேம்பாட்டு ஒப்பந்தம்' கைச்சாத்திட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சரின் விஜயத்தின்போது பல விடயங்கள் பேசப்பட்டன. கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் ஜப்பான் தலைமைத்துவம் வகிப்பது இலங்கைக்கு சாதகமாக உள்ளது. கடன் மறுசீரமைப்புக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் வெளிவிவகாரத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு நிறைவுபெற்றதன் பின்னர் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்திட்ட பணிகளை முன்னெடுக்க வேண்டும் என ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.
வெளிநாட்டு அரச முறை கடன் மறுசீரமைப்பு எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும். இதன் பின்னர் வங்குரோத்து நிலையில் இருந்து நாடு மீண்டு விட்டது என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என்றார்.