ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என தமிழரசு கட்சி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் 27 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேசப்பட்டது. ஆனால் யாரை ஆதரிப்பது என முடிவெடுக்கவில்லை.
தற்போது ஜனாதிபதி தேர்தலில் மூன்று பேர் பிரதானமாக போட்டியிடவுள்ளதாக அறிகிறோம். அவர்கள் மூவரின் தேர்தல் அறிக்கைகள் வெளியான பின்னர், அது தொடர்பில் ஆராய்ந்து யாருக்கு ஆதரவு வழங்குவது என முடிவெடுப்போம்.
அதேவேளை கடந்த மே தின கூட்டம் ஒன்றில் சஜித் பிரேமதாசா உரையாற்றும் போது 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என கூறி இருந்தார்.
இது தொடர்பில் நான் அவரை நாடாளுமன்றில் சந்தித்த போது கேட்டேன். பொலிஸ் காணி அதிகாரம் அதற்குள் இருக்குமா என அவர் அதற்கு இருக்கும் என கூறினார்.
அவ்வேளை நான் அவரிடம் கூறினேன், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது , 13ஐ விட அதிகமாக தரலாம் என கூறினீர்கள் என அவரிடம் கூறினேன் என தெரிவித்தார்.