Our Feeds


Thursday, May 16, 2024

ShortNews Admin

ஊழல் மற்றும் வீண்விரயத்தை இல்லாதொழிக்கும் தேசிய வேலைத்திட்டம் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் - சஜித் பிரேமதாச



தற்போது வாகன இறக்குமதிக்கான அனுமதிப் பத்திரம், மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் பல்வேறு சலுகைகள், சிறப்புரிமைகள் என்பவற்றை வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை பணத்துக்கு எடுக்கும் முயற்சி நடந்து வருகிறது. என்றாலும் இந்த சலுகைகள், சிறப்புரிமைகளுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி மாட்டிக்கொள்ளாது. 220 இலட்சம் மக்களுக்கு தானும் தனது குழுவினரும் ஒருபோதும் துரோகம் செய்யப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


சுற்றுலாத் துறையை மேம்படுத்துகிறோம் என்ற போர்வையில் சுற்றுலாத் தொழில் முன்னெடுக்கப்படாத பிரதேசங்களுக்கும் இந்த மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விகாரைகள்  உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும் மதுபானசாலைகளை நிறுவி வருகின்றனர். இதனால் பாடசாலை மட்டத்தில் இருந்தே மது ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது. மது, சிகரெட் மற்றும் போதைப்பொருள் அற்ற நாடு எமக்கு தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


220 இலட்சம் மக்கள் வறுமையிலும், தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலும் அவதிப்பட்டு வரும் வேளையில், மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரம் மற்றும் கார் இறக்குமதிக்கான அனுமதிப் பத்திர ஏலம்தான் நாட்டின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக மாறியுள்ளது. இந்த மோசமான கலாச்சாரம் இல்லாதொழிக்கப்பட வேண்டும். மக்கள் ஆணைக்கும் மக்கள் உரிமைகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த யுகத்தை உருவாக்க குடிமக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 189 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் அனுராதபுரம், பதவிய, பராக்கிரபுர மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 16 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.


மேலும், அகில இலங்கை ரோபோட்டிக்ஸ் போட்டியில் ரிமோட் மல்டி-அளவீட்டு வடிவமைப்பு சாதனத்தை உருவாக்கி முதலிடத்தைப் பெற்ற அனுரேஷாவிற்கு 25000 ரூபா தொகையையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.


ஜனாதிபதி, பிரதமர், அரசாங்கம், அமைச்சர், இராஜாங்க அமைச்சர், பிரதியமைச்சர் போன்றவர்களிடம் விடயங்களை முன்வைத்து தீர்வுகளை கேட்பதை விட இன்று மக்கள் எதிர்க்கட்சித் தலைவரிடமே தீர்வுகளை கேட்கின்றனர். கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே மூச்சு மற்றும் பிரபஞ்சம் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஆட்சியாளர்களினதும், ஆட்சிக்கு நியமிக்கும் வாக்காளர்களினதும் தவறாலேயே நமது நாட்டில் கல்வி நவீன உலகத்திற்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்படவில்லை. எனவே, இந்த முறையை மாற்றி பிள்ளைகள் புதிய தொழில்நுட்பத்தின் முன்னோடிகளாகவும், தலைவர்களாகவும் மாற வேண்டும். தொழில்நுட்பத்தில் முன்னோடிகளாக திகழும்  மாணவர் தலைமுறையை உருவாக்கும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


ஊழல் மற்றும் வீண்விரயத்தை இல்லாதொழிக்கும் தேசிய வேலைத்திட்டம் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »