Our Feeds


Friday, May 17, 2024

Zameera

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க நடவடிக்கை


 இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அந்த மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் நம்பிக்கை தெரிவித்தார்.


இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அந்த மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை உள் வாங்காது அவர்களை புறக்கணித்து வெளி மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் உள் வாங்கப்படுகின்றனர். என இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.



இது தொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமானூடான சந்திப்பு தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (16) இடம்பெற்றது.



இச் சந்திப்பில் சப்ரகமுவ மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன் தலைமையில் பட்டதாரி ஆசிரியர்கள் பலரும், அதிகாரிகளும் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தானர்.


இதன்போது கருத்து தெரிவித்த பட்டதாரிகள் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் பாடசாலைகளில் கடமையாற்ற தகுதியுடைய பட்டதாரி ஆசிரியர்கள் தயாராக இருப்பதாக அமைச்சரிடம் தெரிவித்தனர்.



இந்த நிலையில் அந்த மாவட்ட பட்டதாரி ஆசிரியர்களை புறக்கணித்து விட்டு இங்குள்ள தமிழ் பாடசாலைகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து வருவது கவலைக்குரிய விடயமாகும் .



எனவே இந்த விடயத்தினை அமைச்சர் ஜனாதிபதி உள்ளிட்ட கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்து கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்ட தமிழ் பாடசாலைகளுக்கு அந்த மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு கோரிக்கையை முன் வைத்தனர்.



இவ்வாறு பட்டதாரி ஆசிரியர்கள் முன் வைத்த கோரிக்கையை ஏற்று கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான் மலையக கல்வி வளர்ச்சியில் ஆரம்ப காலம் முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பின் வாங்காத செயற்பாடுகளை செய்து வருகின்றது.



அதனடிப்படையில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் பாடசாலைகளில் காணப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆளணி பற்றாக்குறையை தீர்க்க இம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை உரிய பாடசாலைகளுக்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.



அதேநேரத்தில் இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கும் கொண்டு வந்த அமைச்சர் விரைவில் உரிய தீர்வை பெற்று தருவதாக சந்திப்பில் கலந்து கொண்ட பட்டதாரிகளுக்கு மேலும் நம்பிக்கை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



ஆ.ரமேஸ்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »