சீனாவின் குவாங்டாங் மாநிலத்தில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை இடிந்து விழுந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இந்த விபத்துக்கு ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்று (மே 01, புதன்கிழமை) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சீனா எக்ஸ்பிரஸ்வே பாலம் விபத்தில் சிக்கிய 18 கார்கள்
மீலாங் எக்ஸ்பிரஸ்வே சாலையின் 17.9 மீட்டர் (58 அடி) பகுதி இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது சாலையில் பயணித்த 18 கார்கள் சரிவில் சிக்கி கீழே விழுந்திருக்கிறது என குவாங்டாங் மாகாணத்தின் மெய்ழோயூ (Meizhou) நகர அதிகாரிகள் இந்தத் தகவலைத் தெரிவித்தனர். நள்ளிரவுக்குப் பிறகு அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
மீட்புப் பணிகளுக்காக சுமார் 500 பணியாளர்கள்
நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக சுமார் 500 பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே நிறுத்தப்பட்டு உள்ளனர். 19 பேர் உயிரிழந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. 30 பேர் காயமடைந்து உள்ளனர். சாலையின் உடைந்த பகுதிகளில் சிக்கி சுமார் 20 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏராளமான கார்களும் தீப்பிடித்து எரிந்தன.
குவாங்டாங் மாகாணத்தின் கனமழை
குவாங்டாங் மாகாணத்தின் சில பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்து வெள்ளம் போன்ற நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் 4 பேர் உயிரிழந்தனர். சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் தங்கள் சொந்த இடத்தை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
கனமழை காரணமாக பேரழிவு
கடந்த வாரம் குவாங்டாங்கில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட பேரழிவு காரணமாக டசி ன் கணக்கான வீடுகள் இடிந்ததால் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது. பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மாகாணத்தில் பெய்த மழையால் சுமார் 140.6 மில்லியன் யுவான் (சீனா நாணயம்) அல்லது 19.4 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாகாண தலைநகர் குவாங்சோவில் உள்ள ஒரு தொழிற்சாலையும் இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் பலியாகினர். 33 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.