விவசாயத்துறையை அபிவிருத்தி செய்யாமல் கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எனவே அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் உட்பட கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் ஆரம்பிக்கும் அனைத்து வேலைத் திட்டங்களையும் வெற்றியடையச் செய்வதற்கு கிராமிய ரீதியாக செயற்படும் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அவசியமானது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
2100 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (08) அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
2023 டிசம்பர் 2 ஆம் திகதி பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கிராம உத்தியோகஸ்தர்களுக்கான பரீட்சை முடிவுகளின்படி, பிரதேச செயலக மட்டத்தில் அதிக புள்ளிகளைப் பெற்ற 2100 விண்ணப்பதாரர்களுக்கு கிராம உத்தியோகஸ்தர் நியமனங்கள் வழங்கப்பட்டன.
சமுர்த்தியை விட மூன்று மடங்கு அதிக கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த பயனாளிகள் குறித்த தகவல்களை கணினிமயமாக்கும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். அதற்கமைய, அடுத்த ஆண்டு முதல் இந்த திட்டத்தை எளிதாக செயல்படுத்த முடியும். அதன்படி, கிராமத்திற்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகரித்து, பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் அபிவிருத்தி செய்ய விவசாயத் துறையை மேம்படுத்த வேண்டும். எனவே இப்பணிகளை பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கமநல சேவை மையங்கள் மட்டத்தில் விவசாய நவீனமயமாக்கல் குழுக்களை நியமித்து விவசாயிகளை திரட்டி தனியார் பங்களிப்புடன் கிராமிய விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை தற்போது தொடங்கியுள்ளோம்.
கிராமிய விவசாயத்தை மேம்படுத்தாமல் கிராமத்தின் வறுமையை ஒழிக்க முடியாது. எனவே விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார் .