புல்மோட்டை வர்த்தக நலன்புரிச் சங்கத்தினால் காஸா சிறுவர்களுக்காக புல்மோட்டை பொதுமக்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட 1.35 மில்லியன் ரூபாய் மே 21 ஆம் திகதி அன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாக கையளிக்கப்பட்டது.
இதன் போது பலஸ்தீன் – இஸ்ரேல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட காஸா சிறுவர்களுக்கு உதவும் முகமாக ஜனாதிபதி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட மனிதாபிமான நிதி திரட்டல் பணிக்காக இலங்கை முஸ்லிம்கள் சார்பிலும் குறிப்பாக புல்மோட்டை மக்கள் சார்பாகவும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் இச்சந்திப்பின் போது எமது பிரதேச மக்களின் சில முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் எழுத்து மூலமான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் சில பின்வருமாறு:
புல்மோட்டையில் அமைந்துள்ள கனிய மணல் கூட்டுத் தாபனத்தின் வருமான நிதியினூடாக புல்மோட்டையின் கல்வி, சுகாதாரம், பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்தல்.
மற்றும் புல்மோட்டைத் தள வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்திற்குள் உள்வாங்கி அபிவிருத்திப் பணிகளை பெற்றுக் கொள்ளுதல்.
புல்மோட்டை- திருமலை பிரதான வீதியைத் தரமாக புனரமைத்தல்.
போன்ற மேலும் சில அபிவிருத்தி தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
புல்மோட்டை வர்த்தக சங்கத்தினால் கௌரவ ஜனாதிபதி யிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக உடனடி கரிசனை செலுத்தும் வகையில் புல்மோட்டை தள வைத்தியசாலையின் தற்போதய நிலை தொடர்பான மேலதிக தகவல்களை ஜனாதிபதி செயலக அதிகாரிகள் எம்மிடமிருந்து பெற்று அதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
புல்மோட்டை மக்கள் சார்பாக எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு கௌரவ ஜனாதிபதியினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை புல்மோட்டை மக்களின் கவனத்திற்கு அவ்வப்போது கொண்டு வருவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.