பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட ஆயிரத்து 700ரூபா சம்பளத்தை எதிர்வரும் ஜுன் 10ஆம் திகதி வழங்கப்பட வேண்டும். அதேவேளை உற்பத்தி ஊக்குவிப்பு என்ற பேரில் சம்பள அதிகரிப்பை மாற்றியமைக்கத் தோட்ட கம்பனிகள் எடுத்துவரும் நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற இராஜதந்திர சிறப்புரிமைச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு கடந்த 4 வருடங்களாக இடம்பெறாத நிலையில் ஜனாதிபதி இதில் தலையிட்டு நாள் ஒன்றுக்கான சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்து, வர்த்தமானி மூலம் அறிவிப்பு செய்தார். அதன் பிரகாரம் 1350 ரூபா அடிப்படை சம்பளமாகவும் 350 ரூபா விசேட கொடுப்பனவாகவும் பறிக்கவேண்டிய கொழுந்துக்கு மேலதிகமாக பறிக்கும் ஒவ்வோரு கிலாேவுக்கும் 80ரூபா என்ற அடிப்படையில் அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை ஜனாதிபதி பெருந்தோட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்து மே தினத்தில் தெரிவித்தார்.
ஆனால் பெருந்தோட்ட கம்பனிகள் 1700 ரூபா நாட் சம்பளத்தை மாற்றியமைத்து உற்பத்தி ஊக்குவிப்பு என்ற அடிப்படையில் வழங்குவதற்கு அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்துள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தோட்ட கம்பனிகள் பெருந்தோட்டங்களை அபிவிருத்தி செய்ய முறையாக உற்பத்தி ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், தோட்ட காணிகள் காடாகி இருக்காது. பெருந்தோட்டங்களில் அதிகமான காணிகள் இன்று தரிசு நிலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.
அத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது முதல் அது இந்த நாட்டின் சட்டமாகும். அதன் பிரகாரம் ஜூன் மாதம் 10ஆம் திகதி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்கும்போது 1700 ரூபா நாட் சம்பளமாக வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். சம்பள அதிகரிப்பை நிறுத்துவதற்கு கம்பனிகளின் சாட்டுப்போக்குகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள 1700 ரூபா சம்பளத்தை எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி வழங்கவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்றார்.