Our Feeds


Tuesday, May 21, 2024

Zameera

சீரற்ற காலநிலையால் 10 மாவட்டங்களில் 33,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு


 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 10 மாவட்டங்களில் 33,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்  உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

அதன்படி, இரத்தினபுரி, கொழும்பு, கேகாலை, அநுராதபுரம், கண்டி, காலி, யாழ்ப்பாணம், களுத்துறை, புத்தளம் மற்றும் கம்பஹா  ஆகிய பகுதிகளிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில், 1,827 பேர்  தற்காலிகமாக பாதுகாப்பான பதினொரு இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு,  அவர்களுக்கான நிவாரணத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று திங்கட்கிழமை (20) இரவு திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கொழும்பு திம்பிரிகஸ்யாய பகுதியில் ஒன்பது குடும்பங்களைச்  சேர்ந்த 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஒவ்வொரு பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல, ஹப்புத்தளை, ஹாலிஎல, பதுளை மற்றும் எல்ல பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அநுராதபுரம் மாவட்டத்தின் இராஜாங்கனை, அங்கமுவ மற்றும் மகாவிலச்சிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. குருநாகல் மாவட்டத்தில் தெதுரு ஓயாவின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. பதுளை மாவட்டத்தின் உள்ஹிட்டிய ஓயா மற்றும் ரத்கிந்த ஓயாவின் பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. புத்தளம் தப்போவ நீர்தேக்கம்  மற்றும் கலவானையில் உள்ள குகுலே கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது.

எனவே, இந்த ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலங்களில் வசிப்பவர்கள் வெள்ள அபாயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கொடிப்பிலி கேட்டுக்கொண்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »