கடந்த சில வாரங்களாக அரசாங்கத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய நபராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மாறியுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பங்களுக்கு மத்தியில், மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன் அந்தக் கட்சியின் பதில் செயல் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.
எனினும், நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளது. அத்துடன், அந்த கட்சியில் நிமல் தரப்பு, மைத்திரி தரப்பு என இரு தரப்பினர் பிரிந்து செயற்படுகின்றனர்.
இந்நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் விஜயதாச ராஜபக்சவின் பிரச்சினையை அடிப்படையாக வைத்து அரசாங்க தரப்பில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா சார்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வாவும், விஜயதாச ராஜபக்சவும் ஒரே அமைச்சரவையில் இருப்பதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிமல் சிறிபால டி சில்வாவின் அணிக்கு ஜனாதிபதி ரணில் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோரின் ஆதரவு இருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறான பின்னணியில், சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதியை சந்திப்பதற்கு விஜயதாச ராஜபக்ச அவகாசம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கோரிக்கையின் பிரகாரம் இருவருக்கும் இடையில் விசேட நேரடிக் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தற்போது பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உங்களை மொட்டுக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு தயாராகியுள்ளனர். அப்படி நடந்தால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவீர்கள்” என இந்த சந்திப்பில் ஜனாதிபதி கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அதற்கு முகங்கொடுக்கத் தயார் என்று விஜயதாச ராஜபக்ச தனது வழக்கமான புன்னகையுடன் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தான் அரசியலை ஆரம்பித்ததாகவும், அதன் காரணமாகவே அக்கட்சியின் பதில் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டதாகவும் விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதியிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.