2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்ட அனுரகுமார திஸாநாயக்க, இம்முறை அவர்களின் தெரிவாக தேசிய மக்கள் சக்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சுவீடனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தற்போது அரசியல் மாற்றம் மற்றும் இலங்கைக்கான புதிய மாற்றத்திற்காக பிரசாரம் செய்து வருவதாகவும், அந்த மாற்றத்தை ஏற்படுத்த தேசிய மக்கள் சக்தி விரும்பம் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சுவீடனில் வாழும் இலங்கையர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ள வேண்டுமெனவும், அவ்வாறு இல்லாத பட்சத்தில் நிகழ்நிலை பிரசாரத்தினை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், எதிர்வரும் தேர்தல்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முக்கிய சக்தியாக இருப்பதாகத் தெரிவித்த அனுர, அதிகாரத்தைப் பெறுவதற்கும், அதிகாரத்தைப் பெற்ற பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், கோட்டாபயவை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றிய புலம்பெயர் இலங்கையர்கள், மக்களின் அபிலாஷைகளை தகர்த்தெறிந்த பின்னர் அவரை வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற கருத்தை உருவாக்கியதாகவும் அனுரகுமார இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.