Our Feeds


Sunday, April 7, 2024

News Editor

பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே இந்நாட்டில் அரசியல் கட்சி உருவாக்கப்பட வேண்டும்


 கட்சியின் தேவைக்கேற்ப நாட்டின் பொருளாதாரத்தை உருவாக்கவன்றி பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே இந்நாட்டில் அரசியல் கட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கட்சிகளின் விருப்பத்திற்கேற்ப நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு சென்று நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படாதிருக்க பாரம்பரிய அரசியலில் இருந்து விடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நேற்று (06) அனுராதபுரம் மாவட்ட சட்டத்தரணிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

அண்மைக்கால நிகழ்வுகள் காரணமாக நாட்டின் ஜனநாயகம் ஆட்டம் கண்டுள்ளது என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து நாட்டை முன்னெடுத்துச் செல்லுமாறு சட்டத்தரணிகளிடம் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கான கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கியதுடன் சட்டத்தரணிகள் தமது தொழில்சார் கோரிக்கைகள் சிலவற்றையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கைகள் பலவற்றிற்கு அதே நேரத்தில் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்ததுடன், அனுராதபுர சட்டத்தரணிகளின் தொழில் அந்தஸ்தை உயர்த்தும் வகையில் சட்டத்தரணி ஓய்வறை நிர்மாணிப்பதற்கு பணம் ஒதுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இங்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நான் இங்கு வரவில்லை. ஜனாதிபதியாக உங்கள் அனைவருக்காகவும் பணியாற்றுகின்றேன். இப்போது நாம் பாரம்பரியமாக நினைத்த காலம் முடிந்துவிட்டது. பாரம்பரிய அரசியலின் காரணமாகவே இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதிலிருந்து நாம் வெளியேற வேண்டும்.

நாட்டின் தேவைக்கேற்ப கட்சி அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். கட்சி அமைப்பின் விருப்பப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியாது. அதைச் செய்யப் போனதால்தான் கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதனை யாரும் பொறுப்பேற்கவில்லை. கடைசிவரை யாரும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை.

இது குறித்து முக்கிய கட்சிகள் ஒன்று கூடி கலந்துரையாடுவது நல்லது என்று நான் நம்புகிறேன். பழைய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் அடிப்படையில் கிராமங்கள் கட்டியெழுப்பப்பட்டன. ஆனால் தற்போது பல புதிய கட்சிகள் உருவாகியுள்ளன. அடுத்த தேர்தலில் இதெல்லாம் மாறலாம். கட்சிகளைப் பற்றி சிந்திக்காமல் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். இல்லையேல் பிரிவுதான் ஏற்படும்.

மிகவும் மோசமான காலகட்டத்தை கடந்து வந்துள்ளோம். எங்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீதியில் அடித்துக் கொல்லப்பட்டார். அந்த நிலைக்கு நாம் திரும்ப வேண்டுமா என்று எல்லோரிடமும் கேட்க விரும்புகிறேன்.

இதற்கு சில அரசியல்வாதிகளும் அங்கீகாரம் அளித்துள்ளனர். மனித உரிமைக்காக நிற்கும் சட்டத்தரணிகள் சங்கம் கூட இதைக் கண்டிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அன்று கொல்லப்பட்டார். இந்த நாட்டில் ஜனநாயகம் எங்கிருந்தது என்பதை இன்று நாம் மறந்துவிட்டோம். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவர் பிரதமராக வேண்டும். இல்லையெனில், வேறு யாராவது பிரதமராகலாம்.

பிரதமரின் வீட்டை எரித்துவிட்டு வெளியேறச் சொன்னால், எதிர்க்கட்சிகள் பிரதமரை இராஜினாமா செய்யச் சொன்னால், நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா என்று கேட்க விரும்புகிறேன். இங்கிலாந்து போன்ற நாட்டில் இது நடந்தால் என்ன நடக்கும், எனவே இப்போது நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்.

அதன்படி, ஒரு கட்சி யாருக்காவது பிரச்சினை ஏற்பட்டால், அதைக் கண்டிக்க வேண்டும். எதிரணியில் இருந்த குமார வெல்கமவையும் காருக்குள் ஏற்றி, சிலர் தீவைக்க முயன்றபோது அங்கிருந்தவர்கள் அவரைக் காப்பாற்றினார்கள். அவர் திருடனும் அல்ல கொலைகாரரும் அல்ல.

எனவே, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். அதன்போது நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். திருடர்களை தண்டிப்போம் என சில தரப்பினர் கூறுகின்றனர். நாங்கள் திருட்டுக்கு எதிரானவர்கள். ஆனால் கட்சியிகளுக்கு அவர்களை தண்டிக்க முடியாது.

திருடர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்று கூறுவது சரிதான். மேலும், ஒன்லைன் சட்டமூலம் கொண்டு வரும்போது ஜனநாயகம் பறிபோகும் என்றும் கூறப்படுகிறது. எனவே, இந்த பழைய அரசியலை விட்டுவிட வேண்டும்.

நாம் அனைவரும் புதிதாக சிந்திக்க வேண்டும். கடந்த காலத்தில் நாட்டின் ஜனநாயகம் ஆட்டம் கண்டது. எனவே, நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயகத்தை சரியான பாதையில் கொண்டு சென்று நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »