இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள உறுப்பினர்கள் "கருப்பு பட்டி அணிந்து" தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் செயற்படும் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் குறிப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடிவரவுத் திணைக்களத்தில் அதிகாரிகள் பற்றாக்குறை, உரிய பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்பாமை, ஷிப்ட் முறை மாற்றம், அரசாங்கத்தின் நிரந்தர விசா கொள்கை இல்லாத காரணத்தினால் சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் நாட்டிற்குள் நுழையும் சர்வதேச கடத்தல்காரர்கள், வெளிநாட்டு தனியார் நிறுவனம் விசா விண்ணப்பங்களை கையாள்வது போன்றவற்றின் அடிப்படையில் இந்த எதிர்ப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும், விமான நிலையத்திற்கு வரும் மற்றும் செல்லும் பயணிகளுக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வழமையான செயற்பாடுகளுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.