புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 7500க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
உலகளவில் தீவிரவாத மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி எதிர்பாராத விதமாக நிகழ்கின்றமையால் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கொவிட் தொற்று, அதன் பின்னர் 2022 மற்றும் 2023இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் என்பவற்றால் சுமார் 4 ஆண்டுகள் சித்திரைப் புத்தாண்டை மக்கள் பெரிதளவில் கொண்டாடவில்லை. எனினும் இவ்வாண்டு நிலைமை சற்று சீராகியுள்ளமையால் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.
தலைநகர் கொழும்பு உட்பட ஏனைய பிரதான நகரங்களில் பெருந்திரளான மக்கள் புத்தாண்டுக்கு தேவையான பொருட்கள், ஆடைகளை கொள்வனவு செய்வதற்காகக் குவிந்துள்ளனர். அத்தோடு தலைநகரிலிருந்து தமது சொந்த இடங்களுக்கு பெருமளவான மக்கள் செல்கின்றமையால் இலங்கை போக்குவரத்து சபை விசேட போக்குவரத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை முதல் இவ்விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. எதிர்வரும் 15ஆம் திகதி அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் வருவதற்காக, 15ஆம் திகதியிலிருந்து விசேட போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.