எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் இடம்பெறவுள்ள விவாதம் தொடர்பில் இந்த நாட்களில் அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் விவாதிக்கத்தயார் எனக்கூறியும், மே மாதம் 7, 9, 13, 14 ஆகிய திகதிகளில் சஜித் பிரேமதாச விரும்பும் எந்தவொரு நாளிலும் விவாதம் நடத்தலாம் எனவும் தெரிவித்து தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ கையொப்பமிட்ட கடிதம் ஒன்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கடிதத்திற்கு பதில் தெரிவித்ததாக கூறும் கடிதம் ஒன்று தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இதில், எதிர்வரும் ஜூன் மாதம் 31ம் திகதி குறித்த விவாதத்தில் கலந்துகொள்ள முடியும் எனக்கூறி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கையொப்பத்துடன் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறியே இக்கடிதம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
எனினும், ஜூன் மாதத்தில் 30 நாட்களே உள்ள நிலையில், இந்த கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில் இக்கடிதம் போலியாக உருவாக்கப்பட்ட ஒன்றென factseeker இனால் கண்டறிய முடிந்தது. மேலும் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஊடகப் பிரிவிடம் வினவியபோது, சஜித் பிரேமதாச அவ்வாறான கடிதமொன்றை அனுப்பவில்லை எனவும், விவாதம் குறித்த எந்தவித உத்தியோகபூர்வ அறிவிப்புகள் இன்னமும் வெளியிடப்படவில்லை என்பதையும் தெரிவித்தனர்.
எனவே சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த கடிதம் போலியானது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.