ஆனால், அதனால் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. நாடு ஸ்திரமடைய வேண்டுமெனில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று அதன் முடிவுகள் வெளியானதும் பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அந்தக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி பதவிக்கான அதிகாரம் கனவாகி விடக் கூடாது என்பதற்காக ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் வரை பாராளுமன்றத் தேர்தலை நடக்கக்கூடாது என்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும். அதேபோன்று ஜனாதிபதித் தேர்தலினால் பொதுஜன பெரமுனவுக்கு ஏற்படப்போகும் பாதகமான தாக்கத்தை தடுப்பதற்கான ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் வெளியாவதற்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதே பெசிலின் எதிர்பார்ப்பாகும்.
அதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு பெசில் ராஜபக்ஷ, ரணிலை கட்டாயப்படுத்துகிறார். மறுபுறம், அவரின் நலனுக்காக அவரின் கோரிக்கையை கவனத்தில் கொள்ளாமல் ரணில் கிடப்பில் விட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த இரு தரப்பினரதும் தேவைகளும் நிறைவேறும் வகையில், ஜனாதிபதித் தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்துவதற்கு அரசாங்கத்துக்குள் பாரதூரமான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக மிகவும் நம்பிக்கையாக தகவல் வட்டாரங்களினூடாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இரு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு சட்டத்தில் எந்த தடங்கலும் இல்லை. அரசியலமைப்பின் பிரகாரம் ஜூலை 17ஆம் திகதியும் செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதிக்கும் இடையில் எந்தவொரு தினத்திலும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுவை கோரும் கடமை தேர்தல் ஆணைக்குழுவுக்கு இருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தினத்தை அறிவித்த தினத்திலேயே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும். அவ்வாறு இடம்பெற்றால் இவ்விரு தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்த முடியும்.
ஆனால், தற்போதைய நிலையில் தேர்தலில் 50 சதவீத வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது என்பது சகலரும் அறிந்த உண்மையாகும். ஜனாதிபதித் தேர்தலில் அவ்வாறானவொரு நிலை ஏற்படாது. ஆனால், பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டுமெனில், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசாங்கத்தால் எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படும். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு கிடைக்காத நிலை ஏற்படும்.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை முதல் இரண்டரை வருடங்களுக்கு பாராளுமன்றத்தை கலைக்கவும் முடியாது. அவ்வாறெனில், ஜனாதிபதியின் செயற்பாடுகளை முன்னெடுக்கவும் முடியாமல் பாராளுமன்றத்தை கலைக்கவும் முடியாமல் நாடு ஸ்திரமற்ற நிலையை அடையும். முதல் இரண்டரை வருடங்களில் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படாது.
அதனால் ஏற்படும் பாதகங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
எவ்வாறாக இருந்தாலும், ஜனாதிபதித் தேர்தல் நடந்து அதன் முடிவுகள் வெளியானதும் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதே சிறந்த முடிவாக இருக்கும் என்றார்.