எமது வாக்குகளினால் மக்கள் பிரதிநிதிகளானவர்கள் இன்று வாகரை பிரதேசத்தினை அழிக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக வாகரை பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில்தொண்டமானுக்கும் வாகரை பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (28) காலை மட்டக்களப்பில் உள்ள ஆளுனரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஏற்பாட்டின் கீழ் இந்த சந்திப்பு நடைபெற்றது.
வாகரை பகுதியில் இல்மனைட் அகழ்வு மற்றும் இறால் பண்ணை திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று கோரி வாகரை பிரதேச மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த திட்டங்கள் ஊடாக வாகரை பிரதேசத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்பதுடன் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் இந்த திட்டங்களுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் குறித்த போராட்டங்களில் ஈடுபடும் வாகரை பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து ஆளுனர் கலந்துரையாடினார்.
தமது பகுதிகளுக்கு இவ்வாறான திட்டங்கள் பொருத்தமற்றவை எனவும் அவை தொடர்பில் ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் எவ்வாறாயினும் அதனையும் மீறி திட்டங்கள் முன்னெடுக்கப்படுமானால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படம் என இங்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டது.
வாகரை பிரதேச மக்களின் இருப்பினை மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சிதைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் வாகரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் இந்த இரால் பண்ணை திட்டத்தினை நிறுத்துவதற்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மக்களுக்கு எதிரான, மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்திற்கும் ஆதரவளிக்கப்போவதில்லையெனவும் அதற்கு எதிராக மக்களுடன் இணைந்து செயற்படுவேன் எனவும் இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் மக்களின் வாழ்வாதாரத்தினை நோக்காக கொண்டு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை எந்த தடைகள் வந்தாலும் முன்கொண்டு செல்வேன் எனவும் மக்களுக்கு தீங்கான எந்த திட்டங்கள் வந்தாலும் அதனை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லையெனவும் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-