எழுபத்திரண்டு தொழிற்சங்கங்களின் சுகாதார ஊழியர்கள் இன்று (02) பத்து வைத்தியசாலைகளில் நான்கு மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டி போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, பேராதனை போதனா வைத்தியசாலை, திருகோணமலை பொது வைத்தியசாலை, கேகாலை பொது வைத்தியசாலை, பொலன்னறுவை பொது வைத்தியசாலை, மன்னார் ஆரம்ப வைத்தியசாலை, கம்பஹா மாவட்ட வைத்தியசாலை ஆகிய இடங்களில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
கண்டி தேசிய வைத்தியசாலை, குருநாகல் போதனா வைத்தியசாலை, அனுராதபுரம் போதனா வைத்தியசாலை, இரத்தினபுரி போதனா வைத்தியசாலை மற்றும் பதுளை மாகாண பொது வைத்தியசாலை ஆகிய ஐந்து வைத்தியசாலைகளில் நேற்று (01) பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தொழிற்சங்க நடவடிக்கை வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த எழுபத்தி இரண்டு தொழிற்சங்கங்களின் 100,000 க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் நிதி அமைச்சகத்திடம் தங்கள் கோரிக்கையை சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவிக்க இரண்டரை மாதங்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை நடத்தினர்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கடந்த மார்ச் மாதம் 05 ஆம் திகதி நிதியமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் இதுவரை அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையிலேயே அவர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.