Our Feeds


Wednesday, April 17, 2024

SHAHNI RAMEES

பாலித தெவரப்பெருமவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது

 



மின்சாரம் தாக்கி உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் மரணம், உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பலத்த சேதம் காரணமாகவே சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




களுத்துறை நாகொடை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவின் பிரதம சட்ட வைத்திய அதிகாரி கே. எம். டி. பி. குணதிலக்க தலைமையில் வைத்தியசாலையின் சட்ட வைத்தியப் பிரிவில் பிரேத பரிசோதனை இன்று (17) நடைபெற்றது.




அமைச்சர் விபத்துக்குள்ளான இடமான யடதொலவத்த, நவுத்துடுவ கரம்பெதர இடத்தை நேற்று (16) களுத்துறை சட்ட வைத்திய அதிகாரி விசேட வைத்தியர் கலாநிதி கே. எம். டி. பி. குணதிலக்க அவதானித்த பின்னர், பிரேத பரிசோதனை இடம்பெற்றுள்ளது.




பின்னர், களுத்துறை குற்றத்தடுப்பு விசாரணை ஆய்வக அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை அவதானித்ததுடன், மத்துகம மேலதிக நீதவானும் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார்.




பிரேத பரிசோதனைக்கு முன்னர், சடலத்தை களுத்துறை பிரதான நீதவான் நிதா ஹேமமாலி ஹல்பண்தெனியவும் பரிசோதனை செய்துள்ளார்.




அமைச்சரின் பிரேதப் பரிசோதனையின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் குழுவும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் இருந்தனர்.




பிரேத பரிசோதனையின் பின்னர் பிற்பகல் 3.30 மணியளவில் அமைச்சரின் மனைவியிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டு களுத்துறையில் உள்ள மலர்ச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.




பாலித தெவரப்பெருமவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தொடங்கொடை, யடதொலவத்தை உள்ளிட்ட பகுதிகளில் வீதியின் இருபுறங்களிலும் வெள்ளைக் கொடிகளும், அனுதாபப் பதாதைகளும் வைக்கப்பட்டுள்ளதுடன், மத்துகம, யடதோலவத்தையில் அமைந்துள்ள இல்லத்திற்கு பெருமளவான மக்கள் குவிந்து வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »