கொழும்பு, கோட்டை மற்றும் பதுளைக்குமிடையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள் பூர்த்தியாவதையிட்டு இன்று முதல் மலையகத்துக்காக புதிய சுற்றுலா சொகுசு வசதிகள் கொண்ட நான்கு ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று(05) இந்த ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் கொழும்பு, கோட்டை மற்றும் பதுளை, பதுளை மற்றும் கொழும்பு, கோட்டைக்குமிடையில் ‘துன்ஹிந்த ஒடிசி’ எனும் இரண்டு புதிய ரயில் சேவைகள் ஈடுபடவுள்ளன.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க, ரயில்வே பொது முகாமையாளர் எச். எம்.கே.டபிள்யூ. பண்டார, போக்குவரத்து மற்றும் வீதிகள் அமைச்சின் அதிகாரிகள், புகையிரத திணைக்கள அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பலர் ‘துன்ஹிந்த ஒடிசி’ ரயிலின் ஆரம்ப பயணத்தில் இன்றைய தினம் கலந்து கொண்டனர்.