சிறைச்சாலைகளின் பாதுகாப்பைப் பலப்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகளில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் மொத்த எண்ணிக்கை 30,094 ஆகும். அவர்களில் 19,695 சந்தேக நபர்கள் உள்ளடங்குகின்றனர்.
அவர்களில், நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களும் காணப்படுகின்றனர்.
தற்போது நிலவும் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு சிறைச்சாலைகளின் பாதுகாப்பைப் பலப்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்காக செல்லும் மக்கள், சிறைச்சாலைக்குள் சட்டவிரோதமான பொருட்களைக் கொண்டு செல்வதைத் தடுப்பதற்காக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அவ்வாறான பொருட்களைக் கொண்டு செல்பவர்கள் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.