CAL-3817 இலக்கம் கொண்ட காரை இவர் ஓட்டி வந்ததாகவும் மருதானையில் புலனாய்வு அதிகாரி பயணித்த காரை முந்திச் செல்ல முற்பட்ட போது இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது அந்த நபர் காரில் இருந்தபடியே துப்பாக்கியை எடுத்து புலனாய்வு அதிகாரியிடம் காட்டியபடி காரை முன்னோக்கிச் செலுத்தியுள்ளார்.
இந்த அதிகாரி தான் எதிர்கொள்ள நேர்ந்த சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு அறிவித்ததுடன், அதன் மூலம் குறித்த காரின் இலக்கம் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையப் பொலிஸார் கடந்த 30 ஆம் திகதி உரிய எண்ணைக் கொண்ட காரைத் தேடினர். இதனையடுத்து மத்திய நெடுஞ்சாலையில் உள்ள யக்கஹாபிட்டி சந்தியில் கடமையாற்றிய அதிவேகப் போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேக நபரை குறித்த காருடன் கைதுசெய்துள்ளனர்.
காரை சோதனையிட்ட போது அங்கு கைத்துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டதையடுத்து அது பொம்மைத் துப்பாக்கி என்பது பொலிஸ் அதிகாரிகளுக்குத் தெரியவந்த நிலையில் விசாரணையின் போது, குறித்த துப்பாக்கியை தனது குழந்தை விளையாடப் பயன்படுத்தியதாகவும் அதனை குழந்தை காரில் வைத்துவிட்டுச் சென்றதாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபருடன் பொம்மைத் துப்பாக்கி மற்றும் கார் என்பன கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில் குறித்த நபர் சில நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.