கண்டி மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட 07 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (28) இந்த அமைதியற்ற நிலைமை ஏற்பட்டதையடுத்து அதனைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் குழுவொன்று வரவழைக்கப்பட்டது.
இப்பகுதியில் இடம்பெற்ற புத்தாண்டு விழாவின் போது காயமடைந்த நபரொருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் பணிப்புரிபவர்களும் புத்தாண்டு விழாவில் பங்கேற்றிருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்க கால தாமதமாகியுள்ளது.
இது தொடர்பில் வினவிய போது வைத்திய பணியாளர்களுக்கும் காயமடைந்த தரப்பினருக்கும் இடையே காரசாரமான வார்த்தைப் பிரயோகம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் இது மோதலாக உருவெடுத்துள்ளதுடன் இரு தரப்பையும் சேர்ந்த 07 பேர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் ஐவர் மெனிக்ஹின்ன வைத்தியசாலையின் ஊழியர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வைத்தியசாலை வளாகத்தின் பாதுகாப்பிற்காக பல பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தவும் மெனிக்ஹின்ன பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.