Our Feeds


Wednesday, April 24, 2024

ShortNews Admin

இதுவரை 7 ஜனாதிபதி வேட்பாளர்கள் - மொட்டுக் கட்சி மற்றும் SLFP வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.



ஜனாதிபதித் தேர்தலின் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த வேட்பாளர்களின் எண்ணிக்கையும் 7 ஆக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் தொழிலதிபர் திலித் ஜயவீர, தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தொழிலதிபர் ஜனக ரத்நாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன் இஷான் ஜயவர்தன ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளனர்

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் பதில் தலைவரும், நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சருமான கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, எதிர்வரும் சில வாரங்களில் கோரிக்கை தொடர்பான தனது முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இது தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்திடம் வினவியபோது, ​​ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது கட்சியின் மே தினக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதித் தேர்தலில் மேலும் பல வேட்பாளர்கள் இணையவுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலுக்கு அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் முன்வைக்கப்படுவது இதுவே முதல் முறை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »