Our Feeds


Monday, April 22, 2024

ShortNews Admin

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றில் 3 நாள் விவாதம்





பாராளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் 24, 25 மற்றும் 26ம் திகதிகளில் கூட்டுவதற்கும், எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை மூன்று நாட்கள் நடத்துவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.




பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.




இதற்கு அமைய 24ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரையான காலப் பகுதியில் குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு, நஞ்சு வகைகள், அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் பற்றிய கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.




இதனைத் தொடர்ந்து, மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படவிருப்பதாக பதில் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.




ஏப்ரல் 25ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரையான காலப் பகுதியில் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 22338/39 ஆம் இலக்க வர்த்தமானி மற்றும் 2352/29 ஆம் இலக்க வர்த்தமானி ஆகியவற்றில் வெளியிடப்பட்ட இரண்டு ஒழுங்குவிதிகள், மதுவரிச் சட்டத்தின் கீழ் 2361/44 இலக்க வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட அறிவித்தல், குடிவருவோர் குடியகல்வோர் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதிக்கப்படவுள்ளன.




இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான இரண்டாவது நாள் விவாதம் நடைபெறும்.




ஏப்ரல் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தின் மூன்றாவது நாள் விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »