உமாஒயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தோடு தொடர்புடைய 248 மில்லியன் டொலர் ஆரம்பத்திலேயே கசிந்திருந்தது. கனடாவின் டப்ளின் நிறுவனம் இத்திட்டத்துக்கு 155 மில்லியன் டொலரை மதிப்பீடு செய்திருந்தது. அதன்பின்னர் ராஜபக்ஸர்கள் 516 மில்லியன் டொலருக்கு மதிப்பீடு செய்திருந்தார்கள். அதற்கிடையில் அவர்கள் பள்ளக்கில் சென்றதாக அன்றைய காலத்தில் மகிந்த அமரவீர தெரிவித்திருந்தார். அரசாங்க பத்திரிகையில் இதுகுறித்து பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
சுற்றுச்சூழலை பற்றி சிந்திக்காமல் உமாஒயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை நிர்மாணிக்கையில் 25 கோடி டொலரை கொள்ளையடித்துள்ளனர். அந்தப் பணத்தை திருடியவர்கள் யார்? எவருடைய பொக்கெட்டுக்கு அந்தப் பணம் சென்றது? அதுதொடர்பில் தேடியறிய வேண்டியதில்லையா? இதெற்கெதிராக நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அது தவறா? ஊழலுக்கு எதிராக செயற்பட்டமை தவறா?
பண்டாரவளையில் நடத்தப்பட்ட ஆர்ப்பட்டத்தின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டதாக ஹரிண் பெர்னாண்டோ பத்திரிகைக்கு கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்கவுக்கு அருகில் உள்ள உதவியாளரே இவ்வாறு கூறுகின்றார்.
அபிவிருத்தி திட்டங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். நாட்டில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், இது அபிவிருத்தியல்ல. இதுவொரு ஊழல். எனவே, கோடிகளில் இலாபம் பெறுவதாக கூறுவதைப் போன்றே பல கோடிகளில் அதற்கான நட்டத்தையும் மதிப்பீடு செய்ய வேண்டும். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான எமது அரசாங்கத்தில் உமாஒயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் தொடர்பில் முழுமையான விசாரணையை நாங்கள் முன்னெடுப்போம்.