அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 22 பிரதேச செயலாளார் பிரிவுகளிலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்காக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலைகள், முஸ்லிம் பள்ளிவாயல்கள், பௌத்த விகாரைகள், இந்து கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், விளையாட்டு கழகங்கள், மகளிர் சங்கங்கள், பொது அமைப்புக்கள் போன்றவற்றின் அபிவிருத்திகளுக்காகவே குறித்த நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தெரிவுசெய்யப்பட்ட குறித்த செயற்றிட்டங்களுக்கான நிதியொதுக்கீட்டு அனுமதி கடிதங்கள் 27.04.2024 சனிக்கிழமையன்று பாராளுமன்ற உறுப்பினரின் கலாவெவ காரியாலயத்தில் வைத்து அதற்குரிய உத்தியோகத்தர்கள், நம்பிக்கையாளர் சபைகள், விகாராதிபதிகள், நிருவாக உத்தியோகத்தர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில்,
“அனுராதபுர மாவட்டத்தில் என்னால் மேற்கொள்ளப்படவிருக்கும் அபிவிருத்திகளின் ஆரம்ப கட்டம் தான் இந்த 100 மில்லயன் ரூபாய். தொடர்ச்சியாக எல்லையற்ற அளவில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான நிதியொதுக்கீடுகள் செய்யப்பட இருக்கின்றன.
நாட்டின் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதோடு தொடர்ச்சியாக வழங்கப்படவும் இருக்கின்றது. கடந்த காலங்களில் என்னால் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்கள் போன்று இனியும் தொடர்ச்சியாக செய்யப்படும் என்பதனை மகிழ்ச்சியாக தெரிவித்து கொள்கின்றேன்” என குறிப்பிட்டார்