ஆனால், நாட்டின் பொருளாதாரம் இன்னும் தொங்குபாலத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை வெற்றிபெறும் வரை தொடர்ந்து செல்வதா அல்லது அந்த வேலைத்திட்டத்தை விட்டுவிட்டு நாட்டை மீண்டும் அதலபாதாளத்தில் தள்ளிவிடுவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வருமானம் 50% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, வலுவான பொருளாதாரத்துடன் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான பின்னணி நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச இரத்தினக்கல் , ஆபரண வர்த்தக நிலையத்தை (இரத்னபுரி இரத்தினக்கல் கோபுரம்) இன்று (04) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு உயர் பங்களிப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், வழங்கக்கூடிய நிவாரணங்கள் குறித்த அறிக்கையை இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து இரத்தினக்கல் அகழ்வோர்களும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பயனடைய வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், எதிர்காலத்தில், இந்தத் துறையில் இருந்து குறைந்தபட்சம் 02 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுவதை இலக்காகக் கொள்ள வேண்டும். இந்தத் துறையை மேம்படுத்தும் போது, இரத்தினச் சுரங்கத் தொழிலாளிகளுக்கும் அதன் நன்மை கிடைக்க வேண்டும்
இரு வருடங்களாக மிகவும் நெருக்கடியுடன் நாட்டை கொண்டுச் சென்றோம். இதன்போது வரி அதிகரிப்பு உள்ளிட்ட கடினமான தீர்மானங்களை முன்னெடுத்தோம். இன்றைய பிரதிபலன்களை பார்க்கும் போது நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் 50% ஆக அதிகரித்துள்ளது. அதனால் சமூக சேவைகளுக்கான செலவு மூன்று மடங்கினால் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த முறை பெரும்போகத்தில் சிறந்த அறுவடையை பெற முடிந்தது. தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். மேலும், அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இம் மாதமும் அடுத்த மாதம் மேலும் 20 கிலோ அரிசி வழங்கப்படும். பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி வழங்கப்பட்டிருப்பதால் கிராமரிய பொருளாதாரம் எழுச்சி கண்டுள்ளது.
இன்று, சுற்றுலா வியாபாரம் அதிக வருமானத்தை ஈட்டுகிறது. மேலும், அன்னிய செலாவணி நாட்டிற்கு மீண்டும் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் இன்று நாட்டு மக்களின் வருமான நிலை மீண்டு வலுவடைய ஆரம்பிக்கிறது.
பொருளாதாரத்தை பாதுகாத்து முன்னேறிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் வீழ்வோம். நாம் இன்று தொங்குபாலத்தின் நடுவில் நிற்கிறோம். வீழ்வதா? மீள்வதா? என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.