Our Feeds


Wednesday, April 10, 2024

SHAHNI RAMEES

அஸ்வெசும தொகை 18 ஆம் திகதிக்குள் வைப்பிலிடப்படும்..!


 மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகளை பரிசீலித்ததை தொடர்ந்து அஸ்வெசும நிவாரணத் தொகையை பெற மேலும் 182,140 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.




அவர்களுக்கான நிலுவைத் தொகை உள்ளிட்ட சகல கொடுப்பனவுகளும் 18ஆம் திகதிக்குள் கணக்கு விபரங்களில் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 



அதன்படி, தற்போது 1,854,000 குடும்பங்கள் அஸ்வெசும நிவாரணத் தொகையை பெற்று வருவதாகவும், அந்தக் குடும்பங்களுக்காக அரசாங்கம் 58.5 பில்லியன் ரூபாவைச் செலவிடுவதாகவும் சேமசிங்க குறிப்பிட்டார்.



நன்மைகளைப் பெறுவதற்கான சகல தகுதிகளையும் பூர்த்தி செய்த சுமார் 200,000 குடும்பங்கள் தங்களது வங்கிக் கணக்குகளைத் திறந்து, அது தொடர்பான தகவல்களைப் புதுப்பிக்கத் தவறிவிட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.



இது தொடர்பில் பிரதேச செயலகங்களினூடாகவும் ஊடகங்களினூடாகவும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும், அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் இருந்து இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை எனவும் சேமசிங்க தெரிவித்தார்.



இரண்டாம் கட்ட நிவாரணத்திற்காக 400,000 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதுவரையில் சுமார் 286,000 குடும்பங்கள் இந்த அமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மே மாதம் ஆரம்பிக்க உள்ளது.



அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் 24 இலட்சம் குடும்பங்களை உள்வாங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், இந்த வருட வரவு செலவு திட்டத்தில் இதற்காக 205 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »