முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் அரசாங்கத்திடமிருந்து அபிவிருத்திப் பணிகளுக்காக தலா 10 கோடி ரூபாய் நிதியைப் பெற்றுள்ளனர். மு.கா நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவுக்கும் இந்த நிதி கிடைத்துள்ளது. இந்த நிலையில் இது எதற்கான ‘டீல்’ என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் மற்றும் மு.கா தலைவர் ரஊப் ஹக்கீம் ஆகியோர் இந்த நிதியை பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுந்தரப்பு எம்.பிகளுக்கு வழங்கப்படும் மேற்படி நிதியை – எதிர் கட்சியிலுள்ள மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ், பைசல் காசிம் மற்றும் அலிசாஹிர் மௌலானா ஆகியோருக்கும் அரசாங்கம் ஒதுக்கியுள்ளமை கவனத்துக்குரியது,
இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், அரசாங்கத்திடமிருந்து இந்த நிதியைப் பெற்றுள்ளனர். அவ்வாறான நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அந்தக் கட்சி விசாரணைகளை நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு – அரசாங்கம் வழங்கும் அபிவிருத்திப் பணிகளுக்கான நிதியை, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக் கொள்வதற்கான காரணம் என்ன என்கிற கேள்வி இங்கு முக்கியமானது. இந்த நிதியின் பொருட்டு, அதைப் பெற்றுக் கொள்ளும் எதிர்ரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்குச் செய்யவுள்ள கைமாறுதான் என்ன?
முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் கோட்டாவின் ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் தொடர்ச்சியாக ஆளுந்தரப்புக்கு ஆதரவளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எடுத்துக்காட்டாக, அண்மையில் நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் – முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் கலந்து கொண்டு, அதற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ், பைசல் காசிம் மற்றும் அலிசாஹிர் மௌலானான ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்ந்து கொண்டனர். இது சபாநாயகருக்கு ஆதரவான செயற்பாடாகவே பார்க்கப்பட்டது.
மறுபுறமாக, அரசாங்கத்தின் நிதியை மு.கா எம்பிகள் பெற்றுக் கொண்டமைக்கு அந்தக் கட்சியின் தலைவர் ஹக்கீம் அனுமதி வழங்கியிருக்கலாம் என்கிற சந்தேகமும் உள்ளது. காரணம், ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் – கட்சியின் முடிவுகளை மீறி செயற்பட்டு வருகின்ற போதும், அவர்களை தொடர்ச்சியாக ஹக்கீம் அரவணைத்துக் கொண்டு செல்வதை அவதானிக்க முடிகிறது. எடுத்துக்காட்டாாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் மு.கா தலைவரும் பைசல் காசிம் எம்பியும் சேர்ந்து கலந்து கொண்டமையினைக் குறிப்பிடலாம்.
சிலவேளை மு.காங்கிரஸ் தலைமையின் அனுமதியின்றி அந்தக் கட்சியின் மேற்படி மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திடமிருந்து நிதியைப் பெற்றுக் கொண்டிருந்தால், அவர்களுக்கு எதிராக மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் நிலைப்பாடாக உள்ளது.
ஆனால், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கே – மு.காங்கிரஸின் தீர்மானத்தை மீறி ஆதரவளித்த அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காமல் – அவர்களை மன்னித்து விட்டவர் மு.கா தலைவர் ரஊப் ஹக்கீம். அவ்வாறான ஒருவர், தலா 10 கோடி ரூபா பணத்தை அரசாங்கத்திடமிருந்து பெற்றமைக்காக தனது எம்பிகளை தண்டிப்பார் என நாம் எதிர்பார்க்க முடியாது.
இன்னொருபுறம், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக தம்மை வாக்களிக்கச் சொன்னவர் மு.கா தலைவர் ரஊப் ஹக்கீம்தான் என்று – பல தடவை மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் அப்போது மு.கா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஹாபிஸ் நசீர் ஆகியோர் பகிரங்கமாக ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி: புதிது தளம்