Our Feeds


Thursday, March 21, 2024

ShortNews Admin

IMF - இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் பணிக்குழு மட்டத்திலான இணக்கம்..!


 சர்வதேச நாணய நிதியத்தின் 2 ஆவது மீளாய்வுக் கூட்டத்தை நிறைவு செய்யும் வகையில், இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையில் பொருளாதார கொள்கைகள் தொடர்பிலான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதென000 சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூயர் (Peter Breuer)தெரிவித்தார்.  


அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்தவுடன் இலங்கைக்கு 337 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வு நிறைவடைந்ததன் பின்னர் இலங்கை மத்திய வங்கியில் இன்று (21) பிற்பகல் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக் குழுவினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அதன் பிரதானி பீட்டர் ப்ரூவர் இதனைக் குறிப்பிட்டார்.


இலங்கையினால் அமுல்படுத்தப்பட்ட சீர்திருத்த வேலைத்திட்டத்தின் மூலம் கிடைத்துள்ள பெறுபேறுகள் போற்றத்தக்கவை எனவும், இதன்மூலம் வெற்றிகரமான முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும் பீட்டர் ப்ரூவர் தெரிவித்தார்.


இலங்கை அமுல்படுத்தியிருக்கும் பொருளாதார மறுசீரமைப்புக்கான வேலைத் திட்டத்தின் பிரதிபலன்கள் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளதென சுட்டிக்காட்டிய அவர், இலங்கையின் பணவீக்கம் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக குறைந்துள்ளதாகவும், அதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியதெனவும் தெரிவித்தார்.  


இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் மற்றும் பிரதித் தலைவர் கட்சியரினா ஸ்விரிட்ஸென்கா (Katsiaryna Svirydzenka) ஆகியோரால் வௌியிடப்பட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் வருமாறு


• நான்கு வருடங்கள் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) மூலம் ஆதரவளிக்கப்படும் பொருளாதார சீர்திருத்த வேலைத் திட்டத்தின் கீழ் இரண்டாவது மீளாய்வின் போது இலங்கை அதிகாரிகளுடனான பணிக்குழு மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.


அதன்படி அதற்கான பேச்சுவார்த்தைகளும் 2024 ஆண்டு IV சட்டத்துக்கமைய நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்த நீட்டிக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டுக்கமைய 2.3 பில்லியன் SDR (3 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) கடன் வசதிக்கான அனுமதியை 2023 மார்ச் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு வழங்கியிருந்தது. 


• பொருளாதார மறுசீரமைப்புக்களின் பிரதிபலன்கள் கிட்ட ஆரம்பித்துள்ளன. அதனை நிலையாக தக்கவைத்துகொள்ள நிர்வாக குறைப்பாடுகள் மற்றும் மோசடி செயற்பாடுகளைத் தடுப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.  


• இந்த பணிக்குழு மட்டத்திலான இணக்கப்பாடு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு மற்றும் அதன் நிதி நிறைவேற்றுக் குழுவின் அனுமதிக்கமைய எதிர்வரும் நாட்களில், 


(i) அதிகாரிகளால் முழுமையான செயற்பாடுகளை முன்னெடுத்தல்,

(ii) பலதரப்பு பங்குதாரர்களின் நிதி பங்களிப்பை உறுதி செய்தல், மறுசீரமைப்புக்கான காலம், நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்துதல், கடன் மறுசீரமைப்புடன் போதுமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை கருத்தில் கொண்டு, நிதி உறுதிப்பாட்டுக்கான மீளாய்வை நிறைவு செய்தல் உள்ளிட்ட படிமுறைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பது அவசியமாகும். 


நிறைவேற்றுக் குழுவின் மீளாய்வு முடிவடைந்த பின்னர், இலங்கைக்கு 254 மில்லியன் SDR ( 337 மில்லியன் அமெரிக்க டொலர்) நிதி உதவி கிட்டும். அதன்படி சர்வதேச நாணய நிதியம் இதுவரையில் இலங்கைக்கு வழங்கியிருக்கும் மொத்த தொகை 762 மில்லியன் SDR (1 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஆகும். 


பண வீக்கத்தை விரைவாகக் மட்டுப்படுத்தல், வௌிநாட்டு கையிருப்பு வலுவடைதல், பொருளாதார வளர்ச்சியின் ஆரம்ப அறிகுறிகள் உள்ளிட்ட பாராட்டுக்குரிய பிரதிபலன்களுடன் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (Extended Fund Facility) கீழ் நிலையான மறுசீரமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அதிகாரிகள் முன்னேற்றத்தை எட்டியுள்ளனர். 


குறிப்பிடத்தக்க நிதி சீர்திருத்தங்களைத் தொடர்ந்து இலங்கையின் பொது நிதி முகாமைத்துவம் வலுவடைந்திருக்கிறது. சமூக செலவினங்களுக்கான குறிகாட்டிகளை தவிர ஏனைய அனைத்து செயல்திறன் நியதிகள் மற்றும் குறிகாட்டி இலக்குகள் 2023 டிசம்பர் இறுதிக்குள் எட்டப்பட்டிருப்பதன் மூலம் செயல்திறன் வலுவடைந்திருக்கிறது.


2024 பெப்ரவரி இறுதிக்குள் பல மூலோபாய நியதிகள் காலம் தாழ்த்தியேனும் நிறைவு செய்யப்பட்டிருப்பதோடு, சில துறைகளில் இன்றும் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 


பொருளாதார நிலை படிப்படியாக மேம்படும். 2023 ஆம் ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளில் 1.6 மற்றும் 4.5 சதவிகித வளர்ச்சி பதிவாகியுள்ளது. உயர் அதிர்வெண் பொருளாதார குறிகாட்டிகள் உற்பத்தி, நிர்மாணம் மற்றும் சேவைத் துறைகளில் தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டுகின்றன. 2022 செப்டம்பரில் 70 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் 2024 பெப்ரவரியில் 5.9 சதவீதமாக குறைந்துள்ளது.


மத்திய வங்கியின் குறிப்பிடத்தக்க அந்நியச் செலாவணி கொள்முதல் மூலம் 2024 பிப்ரவரி இறுதிக்குள் உத்தியோகபூர்வ கையிருப்பு 4.5 பில்லியனாக உயர்வடைந்திருக்கிறது.


பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்காக நிலையானதும் அனைத்தும் உள்ளடங்கியதுமான பாதைக்கு கொண்டுச் செல்வதற்கு மறுசீரமைப்பு வேகத்தை தக்க வைத்துகொள்வது அவசியமாகும். பொருளாதார சீர்திருத்தங்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. 2025 மற்றும் அதற்குப் பின்னரான வருமான வழிமுறைகளை மேம்படுத்தும் அதேநேரம் சொத்து வரியை அறிமுகப்படுத்துவதும் முன்னேற்றத்தை ஈட்டித்தரும்.


வருமான நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான முயற்சிகளை மேம்படுத்துவதும் வரி சேகரிப்பை மேம்படுத்துவதற்கு முக்கியமான காரணியாகும்.


எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்கள் மீதான திருத்தங்களை உரிய வகையில் பேணுவதால் அரச நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிதி அச்சுறுத்தல்களை மட்டுப்படுத்திக்கொள்ள உதவும். பணவீக்கம் எதிர்பார்த்ததை விட வேகமாக குறைந்திருந்தாலும், பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான கண்காணிப்பு அவசியப்படுகிறது. 


உத்தியோகபூர்வ கடன் வழங்குனர்கள் குழு மற்றும் சீனாவின் இறக்குமதி-ஏற்றுமதி வங்கி ஆகியவற்றுடன், கடன் பரிவர்த்தனைகள் தொடர்பான கொள்கை ஒப்பந்தங்களில் இலங்கை கைசாத்திட்டமை, இலங்கையை கடன் நிலைத்தன்மையை நோக்கி நகர்த்துவதில் ஒரு முக்கிய மைல்கல் முயற்சியாகும். அடுத்த கட்டமாக உத்தியோகபூர்வ கடன் வழங்குனர்களுடான ஒப்பந்தங்களை இறுதி செய்வதும், மேலதிக தனியார் கடன் வழங்குனர்களுடான வேலைத்திட்டங்களை உரிய நியதிகளுக்கு அமைவாக ஒப்பந்தம் செய்துகொள்வது தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இதனால் இலங்கையின் இடைக்கால கடன் நிலைத்தன்மையை சுமூகமாக மாற்றியமைக்க உதவும். 


நிர்வாகம் தொடர்பில் அண்மையில் இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்திய செயற்பாட்டுத் திட்டம் முக்கியமான முயற்சியாகும். மோசடி செயற்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், பொருளாதாரம் தொடர்பான நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புதற்கும், வலுவானதும் அனைத்தையும் உள்ளடக்கியதான பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வதற்குமான நிலையான முயற்சிகளும் அவசியப்படுகிறது.  


நுவரெலியாவில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்த சர்வதேச நாணய நிதியக் குழுவினர் இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சில சவால்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெற்றுக்கொண்டனர். ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாப்பதற்கான "அஸ்வெசும" போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களின் இலக்குகள் முக்கியமானவை. அத்தோடு அவற்றை விஸ்தரிப்பதற்கான முயற்சிகளும் தேவைப்படுகிறன.

சர்வதேச நாணய நிதியத்தின் இந்தக் குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, திறைசேரியின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன, அரசாங்க மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தனியார் துறை பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் அபிவிருத்தி பங்குதாரர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.


இலங்கை அதிகாரிகளின் சிறந்த ஒத்துழைப்புக்கு நன்றி கூறுகிறோம்.'' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி கலாநிதி சர்வத் ஜஹானும் பங்கேற்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »