கொழும்பின் சில பகுதிகளில் புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களின் விநியோகங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் அஜித ஜயசுந்தர தெரிவித்திருந்தார்.
பெண்களின் சருமத்தை விரைவாக வெண்மையாக்கும் என கூறி குறித்த கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இதனால் புற்றுநோய்கள் ஏற்படுவது உறுதி என்றும் தெரிவித்திருந்தார்.
இணைய சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இதன்போது, அவர் பெயர் குறிப்பிட்டே ‘Chandni’ எனும் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் முகத்தினை வெண்மையாக்கும் க்ரீம் தொடர்பிலும் கருத்து தெரிவித்திருந்தார்.
குறித்த க்ரீமினை பாவிக்க வேண்டாம் என்றும், இதனை நாம் ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தோம். இதில் ஈயம் அதிகளவு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பாதரசத்தின் அளவும் அதிகம், கென்டியம் எனும் மூலப்பொருளும் அதிகளவு சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் கிரீம் வகைகள் தரமற்றவை. மேற்கூறப்பட்ட க்ரீமினால் நிச்சயமாக புற்றுநோய் உருவாகும் என்பதில் சந்தேகமே இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அத்துடன், இதன்போது உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தடைசெய்யப்பட்ட கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை இலங்கை சந்தையில் சூட்சமமாக பயன்படுத்தப்படுகின்றது.
சில கிரீம்கள் இலங்கையின் பிரபல அழகுக்கலை பார்லர்களில் விற்பனைக்கு கூட வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.