எந்தவொரு தெற்கு அரசியல்வாதியும் வடக்கு
கிழக்கிற்கான அதிகாரத்தினையோ அல்லது அதற்கான நீதியையோ தர விரும்பமாட்டார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
“.. ஜனாதிபதி வேட்பாளர்களாக முன்னிற்பவர்களில் தகுதியான ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ரணில் குறித்து நிறையவே தவறுகளை கூறலாம். ஆனால் ரணில் ஏனையவர்களை விட தகுதியானவர். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ரணில் இருக்கும் போது வெள்ளை வேன் கலாச்சாரம் இருக்காது. இப்போது இருக்கின்றவர்களில் அவர் தகுதியானவர்.
ரணில் சிங்கள பௌத்தர் அல்ல. அவர் சர்வதேச மனிதன். அவரது யோசனைகள் வேறு விதமாக இருக்கும். இந்நாட்டில் வாக்கு வேண்டுமெனில் சிங்கள பௌத்தராக இருக்க வேண்டும். அதற்கு அவர் செய்ய வேண்டியதொன்று நமக்கு தரவேண்டியவைகளை அறுத்துவிட வேண்டும். சிறுபான்மைகளை விட பெரும்பான்மைக்கு சலுகைகளை வழங்க வேண்டும்.
அவரது கருத்து, புத்திசாதூரியமானவை பாராட்டக்கூடிய விடயமாகும். அவர் தலைவராக இருக்கும்போது தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்காது, ஆனால் நாடு முன்னேறும். முறுகல்கள், பதற்ற நிலைகள் நாட்டில் இருக்காது என நான் நினைக்கிறேன்.
ஜேவிபி உடன் கலந்துரையாடி வேலையில்லை, ஏனெனில் வடக்கு கிழக்கினை இணைத்து 1987 இல் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தானது. அதனை இல்லாதொழிக்க நீதிமன்றம் சென்றது ஜேவிபி. அதல்லாது ஜேவிபி கூறுவது போல் நம்மையும் பெரும்பான்மையினரையும் தராசில் இட்டு நிறுத்து ஆட்சியை முன்னெடுப்பது என்பதற்கு நாம் உடந்தையில்லை. வடக்கு கிழக்கு அதிகாரம் எமக்கு வேண்டும். அந்த உடன்பாட்டில் ஜேவிபி இல்லை.
எந்தவொரு தெற்கு அரசியல்வாதியும் வடக்கு கிழக்கிற்கான அதிகாரத்தினையோ அல்லது அதற்கான நீதியையோ தர விரும்பமாட்டார்கள்.
எனது வாக்கு ரணிலுக்கு தான், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் வேட்பாளராக நின்றால் அவருக்கு வழங்க முடியாது. அது வேறு கதை..”