இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் வகையில் மிக விரைவில் பலப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் மற்றும் 75 ஆவது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கை இந்தியச் சங்கம் நேற்று முன்தினம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மத மற்றும் கலாச்சார ரீதியான பாரிய பிணைப்பு உள்ளது. மேலும் நமது இரு நாடுகளுக்கும் பொதுவான பாரம்பரியமும் உள்ளது.
நானும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டாக கைச்சாத்திட்ட தொலைநோக்கு பிரகடனம் செயற்படுத்தப்படும் நிலையில் 75ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்படுவது விசேட அம்சமாகும். இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவை பலப்படுத்தும் தொலைநோக்கு அறிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளோம்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் மத உறவுகள், இரு நாடுகளும் ஜனநாயக நாடுகளாக இருப்பது, இரு நாடுகளுக்கும் பிரிட்டிஷ் சட்டக் கட்டமைப்பு இருப்பது போன்ற விடயங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து பேசிவருகிறோம். ஆனால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவை நாம் மறந்துவிட்டோம் என்றார்