இந்திய பிரதமர் மோடி பூட்டானுக்கு 2 நாட்கள் அரசு முறை
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.பூட்டானிலுள்ள பாரோ சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று(22) காலை இந்தியப் பிரதமர் மோடி சென்றடைந்தார். அவரை பூட்டான் பிரதமர் செரிங் டோபே நேரில் சென்று வரவேற்றார்.
தொடர்ந்து பாரோ விமான நிலையத்தில் இருந்து பூட்டானின் தலைநகர் திம்புவுக்கு சாலை மார்க்கமாக பயணித்த மோடியை வழிநெடுகிலும் இந்திய மற்றும் பூட்டானின் தேசிய கொடிகளை ஏந்தி நின்றபடி அந்நாட்டு மக்கள் வரவேற்பளித்தனர்.
இந்நிலையில், நரேந்திர மோடிக்கு பூட்டானின் உயரிய சிவிலியன் விருதான 'ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ' விருது வழங்கப்பட்டுள்ளது. பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் இவ்விருதை வழங்கினார். இவ்விருதைப் பெற்ற முதல் வெளிநாட்டு அரசாங்கத் தலைவர் என்ற பெருமையைப் பிரதமர் மோடி பெற்றார்.
இந்தியா - பூட்டான் உறவுகளின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி செய்த சிறந்த பங்களிப்பையும், பூட்டான் நாட்டுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் அவர் செய்த சிறப்பான சேவையையும் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தரவரிசை மற்றும் முன்னுரிமையின்படி, வாழ்நாள் சாதனைக்கான அலங்காரமாக ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ விருது நிறுவப்பட்டது. மேலும், பூட்டானில் உள்ள மரியாதை அமைப்பின் உச்சமாக இந்த விருது உள்ளது.
இந்த விருதைப் பெற்ற பிரதமர் மோடி, "பூட்டானால் ஆர்டர் ஆப் தி ட்ரூக் கியால்போ விருது வழங்கப்படுவதை பெருமையாகக் கருதுகிறேன். 140 கோடி இந்தியர்களுக்கு இதை அர்ப்பணிக்கிறேன்" என்று தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ரஷ்யா தனது உயரிய சிவிலியன் விருதான 'தி ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ' விருதை பிரதமர் மோடிக்கு வழங்கியது. மேலும், 2020ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க ஆயுதப்படையின் 'லெஜியன் ஆப் மெரிட் பை தி யு.எஸ். கவர்மென்ட்' விருதைப் பெற்றார்.