உக்ரைனின் தெற்குப் பகுதியிலுள்ள ஒடேசா நகரில்
ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:ஒடேசா குடியிருப்புப் பகுதியில் ரஷ்யா நடத்திய இரட்டை ஏவுகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த மீட்புப் படையினா் உள்ளிட்ட மேலும் 5 போ் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். அதையடுத்து, இத்தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ரஷ்யா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் தீபகற்பமான கிரீமியாவிலிருந்து இஸ்கண்டா்-எம் ரகத்தைச் சோ்ந்த ஏவுகணை ஒடேசா நகரின் மீது வெள்ளிக்கிழமை ஏவப்பட்டது.
இது குடியிருப்புப் பகுதியில் விழுந்து சுமாா் 10 கட்டடங்கள் சேதமடைந்தன. அப்பகுதிக்கு மீட்புக் குழுவினா் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, அதே இடத்தைக் குறிவைத்து 2ஆவது ஏவுகணையை ரஷ்யா வீசியது. இந்த இரட்டைத் தாக்குதலில் மீட்புப் பணிக்காக வந்திருந்த வைத்தியப் பணியாளா்கள், மீட்புக் குழுவினா் உட்பட 16 போ் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது 21ஆக உயா்ந்துள்ளது. சுமாா் 10 இலட்சம் மக்கள்தொகையைக் கொண்ட துறைமுக நகரான ஒடேசாவில் ரஷ்யா அண்மைக் காலத்தில் நடத்தியுள்ள மிக மோசமான தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.